`ராணுவ உதவியைத் தமிழக அரசு கேட்கவில்லை!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் | The state government didn't asked for military support, says the defence minister

வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:06:53 (30/11/2018)

`ராணுவ உதவியைத் தமிழக அரசு கேட்கவில்லை!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

`தமிழக அரசு, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி மேற்கொள்ள ராணுவத்தை அனுப்ப மத்திய அரசிடம் கேட்கவில்லை. கேட்டால் வழங்குவோம்' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நிர்மலா சீதாரமன்

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை கஜா புயல் தாக்கிச்சென்றது. இதனால் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரங்கள் மற்றும் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இன்னும் பல்வேறு பகுதிகளில் மின்சார இணைப்பு சரிவர கிடைக்கவில்லை.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் வந்து பார்வையிட்டு குடிசை இழந்தவர்களுக்கு 1 லட்சம் கான்க்ரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என உறுதி அளித்துள்ளார். 

தற்போது  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கஜா புயலால் பாதித்த திருவாரூர் மாவட்டத்தை ஆய்வு செய்து, பின்னர் திருத்துறைப்பூண்டியில் தனியார் மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதைத் தொடர்ந்து மக்களின் கருத்தையும் கேட்டறிந்தார். இவருடன் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன், பா.ஜ.க பொதுச் செயலாளர்  கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் காமராஜ், நிர்மலா சீதாராமனிடம் கஜா புயல் பாதிப்பால் ஏற்பட்டுள்ள இழப்புக்குத் தமிழக அரசு கேட்டுள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக வழங்க வேண்டும், தமிழகத்துக்குக் கூடுதலாக மண்ணெண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசின் உதவியை வழங்க வேண்டும் என்று கோரியும் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். 

அமைச்சர் காமராஜ்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, நிர்மலா சீதாராமன்,  ``தமிழக அரசு, கஜா புயல் பாதிப்பு ஏற்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி மேற்கொள்ள ராணுவத்தை அனுப்புங்கள் என மத்திய அரசிடம் கேட்கவில்லை. தற்போது கேட்டால் அனுப்புவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 7-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்தியதற்கான காலக்கெடு முடிவடைய  இன்னும் ஓரிரு நாள்களே உள்ள நிலையில் தமிழக அரசே பிரீமியத் தொகையைச் செலுத்திவிட்டு, பின்னர் பயிர் காப்பீடு நிவாரணம் வழங்கும்போது இந்த பிரீமியத் தொகையை பிடித்தம் செய்துகொள்ளலாம் என்ற ஒரு யோசனையையும் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளோம். தமிழகத்துக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் காமராஜ் அளித்துள்ள கோரிக்கை குறித்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.