எதற்காக ரகசியத் திருமணம்? - பா.ம.க-வால் கலங்கும் காடுவெட்டி குரு குடும்பம் | The family members of guru afraid of PMK leader

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:07:30 (30/11/2018)

எதற்காக ரகசியத் திருமணம்? - பா.ம.க-வால் கலங்கும் காடுவெட்டி குரு குடும்பம்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டியைச் சேர்ந்தவரும், வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான காடுவெட்டி குருவின் மகள் விருத்தாம்பிகை, குருவின் தங்கை மகன் மனோஜ்கிரண் இருவரும் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் தங்களின் உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். 

திருமணம்

இந்த நிலையில், நேற்று குருவின் மற்றொரு சகோதரி மீனாட்சியின் வீட்டில் குருவின் குடும்பத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது குருவின் மகன் கனல்அரசு,  ``எனது தந்தையை கட்சிக்காக நல்லா பயன்படுத்திக் கொண்டனர். வன்னியர் சங்கத்தையும், பா.ம.க-வையும் வளர்க்க தந்தை கடுமையாகப் பாடுபட்டார். என் தந்தை மருத்துவமனையில் இருந்தபோது, யாரும் உதவி செய்யவரவில்லை. மருத்துவமனையில் இருந்தபோது டியூப்பை கழட்டி அதை வீடியோவில் பேச வைத்து வெளியிட்டால்தான் கட்சிக்கு எந்த கெட்ட பெயரும் வராது என கட்சிகாரர்கள் கூறினார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன். டியூப்பை கழட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மறுத்துவிட்டேன். அப்போது என் தந்தை பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், கட்சியை வளர்க்கணும் என்பதற்காக அப்படிச் செய்தனர். ராமதாஸ் மீது அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஆனால், மருத்துவமனையில் அப்பாவுக்கு அந்த மரியாதை இல்லாமல் போய்விட்டது. தன் மூத்த மகன்  குரு என ராமதாஸ் அடிக்கடி சொல்வார். அப்படி ஏதுவும் இல்லை, என் தந்தை இறந்த பிறகு அவர் தரப்பிலிருந்து யாரும் கூப்பிட்டு கூடப் பேசவில்லை.

நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். அது பிடிக்காமல்தான் எங்களைப் பிரித்துவிட்டார். அவர் ஏன் இப்படிச் செய்கிறார் என தெரியவில்லை. எங்களது அக்கா விருப்பப்படி தான் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணம் நடைபெறக் கூடாது என ராமதாஸும், அவரது ஆட்களும் எங்களைத் தொடர்ந்து மிரட்டி வந்தனர். அக்காவை தூக்கிக்கொண்டு சென்று அவரின் உறவினருக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்கள் என எங்களுக்குத் தகவல் வந்தது. அதனால்தான் இந்த திருமணம் அவசர அவசரமாக நடைபெற்றது.

நாங்கள் இத்தனை நாளா அவரை எப்படி தெய்வமாக  நம்பினமோ, அதேபோல் தான் எங்க அம்மாவும் நம்பினார். நாங்கள் இப்போது புரிந்து கொண்டோம். எங்கள் அம்மா இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அதைப் புரிந்துகொண்டு விரைவில் எங்களோடு வருவார். ராமதாஸின் உறவினர்தான் எங்கள் அம்மா. அவரின் பிடியில்தான் எங்க அம்மா உள்ளார். எங்களுக்கு வன்னிய உறவுகளும், பா.ம.க-வினரும் ஆதரவு தருகின்றனர். அதுபோதும், எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்றார்.

குரு குடும்பம்

குருவின் மகள் விருதாம்பிகை, ``என் தந்தை விருப்பப்படிதான் இந்தத் திருமணம் நடைபெற்றது. நான் அத்தை மகனை திருமணம் செய்து கொள்ளப் போகிற விஷயம் என் அம்மாவுக்குத் தெரியும். ஆனால், ஏன் இப்படி பேசினார் என தெரியவில்லை. ராமதாஸின் பிடியில் எனது அம்மா சிக்கியுள்ளார். அவர்கள் கூறுவதைதான் எங்க அம்மா வெளியே சொல்கிறார்” என்றார்.

குருவின் மாப்பிள்ளை மனோஜ் கிரண், ``நான் பிறந்த நாள் முதல் என்னோட மாமா குருவோடு தான் அதிகம் இருந்தேன். நான் தற்போது ஐ.ஏ.எஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். நானும் விருதாம்பிகையும் சின்ன வயதிலிருந்து விரும்பினோம். அதனால் திருமணம்செய்து கொண்டோம். திருமணம் செய்துகொண்டு ஊருக்குச் செல்லலாம் என இருந்தோம். அப்போது ஊரில் உள்ளவர்கள் இங்கு வரக்கூடாது என பா.ம.க-வைச் சேர்ந்த வைத்தியின் சொல்பேச்சைக் கேட்டு எங்களை மிரட்டினர். தொடர்ந்து போலீஸாரிடம் முறையிட்டுள்ளோம். பிரச்னை குறைந்ததும் நாங்களே போலீஸார் மூலம் அங்கு அனுப்பி வைக்கிறோம் என கும்பகோணம் போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், வைத்தி 100 ஆட்களோடு வந்து எங்களது குடும்பத்தினரை அடித்துள்ளார். இவ்வளவும் ராமதாஸின் தூண்டுதலால்தான் நடந்துள்ளது.
என் மாமியை (குருவின் மனைவி) தற்போது வைத்திதான் அழைத்து வந்து காடுவெட்டியில் பிரச்னை செய்துள்ளார். ராமதாஸின் பிடியில்தான் என் மாமி உள்ளார். சொத்துக்காக நாங்கள் எல்லாம் இதைச் செய்யவில்லை. எங்களிடம் உள்ள சொத்தே போதும். என் மாமியை ராமதாஸ் மூளைச்சலவை செய்து வைத்து பேட்டிகொடுக்க வைத்துள்ளார்.

எங்களது குடும்பத்தில் நடக்கும் பிரச்னைக்கெல்லாம் காரணம் ராமதாஸும், வைத்தியும் தான். மாமாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்தாண்டு செப்டம்பர் மாதமே சேர்த்தோம். அப்போது ராமதாஸ் தொண்டைவலி காரணமாக குரு சேர்க்கப்பட்டுள்ளார் என கூறினார். ஆனால், அவருக்கு உடல் நிலை மோசமானது. அப்போதே ராமதாஸுக்கும், எங்களுக்கும் தெரியும், ஆனால் இதை வெளியே சொல்லக் கூடாது என அவர் எங்களைத் தடுத்துவிட்டார். வேல்முருகன் உதவி செய்ய முன்வந்த தகவலையடுத்துதான் ராமதாஸ் உதவி செய்வது போல் நடித்தார்.

அப்போலோ மருத்துவமனையில் செலவான ரூ. 32 லட்சம் செலவுத் தொகையை மட்டுமே ஏற்றுக்கொண்டனர். நாங்கள் ஆபரேசன் செய்யச் சொல்லியும் ராமதாஸ் தரப்பினர் எங்களைத் தடுத்துவிட்டனர். ஆபரேசன் செய்திருந்தால் எங்களது மாமாவை காப்பாத்தியிருக்கலாம். சிங்கப்பூர் அழைத்துச் செல்வதாக அவர் கூறியது எல்லாம் பொய். நான்தான் சிங்கப்பூர் அழைத்துச் செல்வதற்கு முயற்சி செய்தேன். இங்கேயே ரூ.40 லட்சம் செலவாகியுள்ளது. சிங்கப்பூர் போனால் ரூ.1.5 கோடி செலவாகும் உங்களிடம் அவ்வளவு பணம் உள்ளதா என ராமதாஸ் என்னிடமே கேட்டார். ஆனால், நாங்கள் அவரை நம்பினோம். ஆனால், அவர் காப்பாற்ற முன்வரவில்லை. இவ்வளவு துரோகத்தைச் செய்து எங்களை நடுரோட்டில் நிறுத்தியுள்ளதற்கு ராமதாஸ் தான் காரணம்.
இதைச் சொல்லும் எனக்கும் எனது குடும்பத்தில் உள்ளவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு ராமதாஸ்தான் பொறுப்பு. அன்புமணி ராமதாஸ் ஒரு மேடையில் ஏறி 100 நாளில் குருவின் கடனை அடைப்போம் என உறுதியளித்தார். ஆனால், எதுவும் எங்களுக்குச் செய்யவில்லை. நான் பத்து தடவை நேரில் சந்தித்திருப்பேன். அப்போது கடன் எல்லாம் அடைக்க முடியாது என கூறினார்.

இனிமேல் குருவின் கடனை யாரும் அடைக்க வேண்டாம். எங்களை நிம்மதியாக விடுங்கள். திருமணம் நடைபெற்றது எங்களது சொந்தவிஷயம். இதில் கட்சிக்கோ, ராமதாஸுக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. எங்களது குடும்ப பிரச்னையை நாங்களே தீர்த்துக் கொள்கிறோம். எங்களது மாமாவுக்கு யாரும் மணிமண்டமும்  கட்ட வேண்டாம். ராமதாஸ் செய்வதெல்லாம் அரசியலுக்காக, எங்களது குடும்பத்துக்காக எதையும் இனி செய்ய வேண்டாம். ராமதாஸ் செய்ததெல்லாம் ரூ.32 லட்சம் மருத்துவ செலவும், வீட்டுக்கு ரூ. 6 லட்சமும் தான். ஆனால், எங்களை ஒவ்வொரு நாளும் சித்ரவதை செய்து வருகிறார்.

எங்களுக்கு பா.ம.க-வினராலும், வன்னியர் சங்கத்தினராலும் எந்த அச்சமும் இல்லை. ஆனால், ராமதாஸ் ஏதாவது தூண்டி எங்களுக்கு எதிராக செயல்பட்டால் தான் உண்டு. வன்னியர் அமைப்புகள் அனைத்தும் எங்களுக்கு ஆதரவு தருகிறது. எங்களிடமே பேசிக்கொண்டு தான் இருக்கின்றனர். எங்களது மாமாவின் படத்தை பேனரில் போடக்கூடாது என ராமதாஸின் ஆட்கள்தான் சொல்லி வருகின்றனர். இந்த கட்சியிலும் இனிமேலும் இருந்தீர்கள் என்றால் எங்களது மாமா போல் நீங்களும் ஒருநாள் ஆவீர்கள். நாங்கள் இன்று எங்களது மாமாவை தொலைத்துவிட்டு நடுரோட்டில் நிற்கிறோம். அதேபோல் நீங்களும் குடும்பத்தை இழந்து நிற்க வேண்டாம்.

என் மாமாவின் பெயரில் சுமார் ரூ.300 கோடி வன்னியர் சங்க சொத்துகள் உள்ளது. அந்த சொத்தை மாமி, மகன், மகள் ஆகியோர் கையெழுத்து போட்டால்தான் மாறும். அந்த சொத்தை அபகரிக்க தான் விருதாம்பிகையை அவரின் உறவினருக்கு திருமணம் செய்ய முயன்றனர். எங்களது மாமாவின் விருப்பம் நானும், விருதாம்பிகையும் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால், ராமதாஸின் ஆட்கள் விருதாம்பிகையை கடத்திச் செல்ல திட்டம் தீட்டியதால்தான் நாங்கள் அவசரமாக திருமணம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று” என்றார்.

குருவின் சகோதரி மீனாட்சி கூறுகையில், ``என் தாயை காடுவெட்டியில் இன்று ராமதாஸின் ஆட்கள் அடித்துள்ளனர். எங்களது குடும்பத்தை அழிக்க ராமதாஸ் திட்டம் போட்டு அவர்களை ஏவி விட்டுள்ளார். எங்களை ஏன் அழி்க்க வேண்டும் என நினைக்கிறார்கள் என தெரியவில்லை. நாங்கள் வளரக்கூடாது, வாழக்கூடாது என அவர் நினைக்கிறார்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க