வெளியிடப்பட்ட நேரம்: 09:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:09:28 (30/11/2018)

பா.ஜ.க., மகளிர் அணி மாநிலத் தலைவியின் காரில் பெட்ரோல் குண்டு வீச்சு !

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிரணித் தலைவியின் காரில் அதிகாலை 4 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பி.ஜே.பி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியாக மகாலட்சுமி பதவி வகித்து வருகிறார். இவர் மதுரையில் தமிழக பா.ஜ.க-வின் மாநில மகளிர் மாநாட்டை ஜூலை 22-ம் தேதி ‘தமிழ்மகள் தாமரை மாநாடு’ என்ற பெயரில் நடத்தி முடித்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், பா.ஜ.க-வின் அகில இந்திய மகளிரணித் தலைவி விஜயா ராஹத்கர் உட்பட பலர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மகாலெட்சுமி. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., வேட்பாளராகத் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.  இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணிக்கு வீட்டின் எதிரே நிறுத்திவைத்திருந்த அவரது காரின் மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இவரது கார் மீது சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் இதைச் செய்தது மர்ம நபர்களா இல்லை வேறு யாரும் சுயநலத்துக்காக செய்துள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.