வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:10 (30/11/2018)

82,170 டன் பெரிய சரக்குக் கப்பலைக் கையாண்டு தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் முதல்முறையாக 82,170 மெட்ரிக் டன் சரக்குக் கப்பலைக் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

தூத்துக்குடி துறைமுகம்

இந்தியத் துறைமுகங்களில் சிறப்பு பெற்ற தமிழகத்தின் துறைமுகவழி நுழைவு வாயிலான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இரண்டு சரக்குப் பெட்டகத் தளம் உட்பட 14 கப்பல் தளத்துடன் செயல்பட்டு வருகிறது. சரக்குகளைக் கையாளுதல், நிலக்கரி இறக்குமதி ஆகியவற்றில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இத்துறைமுகத்தில் சரக்குத்தளம் ஆழப்படுத்தப்பட்ட பிறகு பெரிய நீளமான சரக்குக் கப்பல்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இதனால்,14 மிதவை ஆழம் வரை உடைய சரக்குக் கப்பல்கள் கையாளப்பட தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி 77,000 மெட்ரிக் டன் சரக்குடன் `எம்.வி.யானிஸ் பொர்கைஸ்' நிலக்கரி கப்பல் ஒன்று வந்து சென்றது. தற்போது அந்தக் கப்பலைவிட, பெரிய கப்பலான `எம்.வி.போட்டிகிளரி ஜியோர்ஜியோ அவினோ' (என்ற சரக்குக் கப்பல் தூத்துக்குடி துறைமுகத்தின் 9-வது கப்பல் தளத்துக்கு வந்தடைந்தது. இத்தாலி நாட்டின் கொடி கொண்ட இந்தக் கப்பல் 93,275 டன் இருப்பு அகலம், 229.2 மீட்டர் நீளமும், 38 மீட்டர் அகலமும், 14 மீட்டர் மிதவை ஆழமும் உடையது. இந்தக் கப்பல் ஐக்கிய அரபு நாட்டில் உள்ள மினா சாகர் துறைமுகத்திலிருந்து 82,170 டன் சுண்ணாம்புக் கற்களை ஏற்றிக்கொண்டு வந்தது. 

இதுகுறித்து துறைமுகப் பொறுப்புக்கழகத்தின் துணைத் தலைவர் வையாபுரி கூறுகையில், ``இத்துறைமுகத்தின் கப்பல் தளங்களில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புக்கான தூர்வாரும் பணி மற்றும் மற்றும் மேற்கொள்ளப்பட இருக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணி திட்டங்கள் துறைமுகத்தின் சரக்கு கையாளும் சவாலை எதிர்கொண்டு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், ராக் பாஸ்பேட் ஆகிய சரக்குகளை கையாளுவதற்கு உறுதுணையாக இருக்கும்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க