நள்ளிரவில் தி.மு.க நகரச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் வீடுகளில் ஐ.டி ரெய்டு | Income tax raid in Vellore DMK Party Members House

வெளியிடப்பட்ட நேரம்: 11:36 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:36 (30/11/2018)

நள்ளிரவில் தி.மு.க நகரச் செயலாளர், முன்னாள் கவுன்சிலர் வீடுகளில் ஐ.டி ரெய்டு

டெண்டர் பணிகளுக்கு போலி பில் கொடுத்ததுடன் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் தி.மு.க நகரச் செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கவுன்சிலர் வீடு

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு புது வீதியைச் சேர்ந்தவர் முகமது ஆகில் (60). இவர், பேரணாம்பட்டு பேரூராட்சியாக இருந்தபோதும், பின்னர் நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்ட போதும் தொடர்ந்து 4 முறை சுயேச்சையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனவர். ஒருமுறை பேரூராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் மனைவி நகினாபானுவும் இரண்டு முறை கவுன்சிலராக பதவி வகித்தவர். முகமது ஆகில் கவுன்சிலராக இருந்த காலங்களில் தனது உறவினர் பெண்ணான சம்சாத்பேகம் என்பவரின் பெயரில் நகராட்சி டெண்டர் பணிகளை எடுத்துச் செய்துள்ளார். 

டெண்டர் பணிகளை மேற்கொண்டதற்காகப் போலி பில்கள் தயாரித்து லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. மேலும், பேரணாம்பட்டு மெயின் ரோட்டில் பெரிய வணிக வளாகம், வி.கோட்டா சாலையில் வீடு மற்றும் பத்து கடைகள் கொண்ட கட்டடம், தீவனம் அரைக்கும் குடோன் என உள்ளூர் மற்றும் வெளியூர்களில் பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கிக் குவித்ததாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்றிரவு சென்னையில் இருந்து 4 கார்களில் 20 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள், பேரணாம்பட்டு புதுவீதி பகுதிக்கு வந்தனர்.

அங்குள்ள முன்னாள் கவுன்சிலர் முகமது ஆகில் வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். அவருக்குச் சொந்தமான குடோன், வணிக வளாகம் உட்பட பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை வாங்கிக் குவித்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும், முகமது ஆகிலின் நெருங்கிய நண்பரான நகராட்சி முன்னாள் தலைவரும், தி.மு.க. நகரச் செயலாளருமான ஆலியார் ஜூபேர் அகமதுவின் (55) வீடு மற்றும் அலுவலகம், மண்டி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இவரிடம் இருந்தும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவு ஒரு மணி வரை இந்தச் சோதனை நடைபெற்றது.

தி.மு.க நகரச் செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஆகிய இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர். முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை பேரணாம்பட்டு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.