வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:53 (30/11/2018)

`இது நான் உங்களுக்குத் தரும் அட்வைஸ்!'- காவலர்கள் மத்தியில் பொன்.மாணிக்கவேல் உரை

`பணத்தை எதிர்பார்த்து வேலை செய்யாதீர்கள்' என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன் மாணிக்கவேல்

ஐ.ஜி பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று அவர் பணி ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு ரயில்வே காவல்துறை சார்பில் நேற்று அவருக்குப் பிரிவு உபசரிப்பு விழா நடத்தப்பட்டது. இதில் மிகவும் உருக்கமாகப் பேசினார். இந்நிலையில் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் அவரின் தலைமையில் விசாரிக்கப்பட்டு வந்த சிலைக் கடத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதற்கிடையே, சென்னை எழும்பூரில் சிறப்பாகப் பணியாற்றிய காவலர்களுக்கு வெகுமதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பொன்.மாணிக்கவேல் கலந்துகொண்டு சென்னை, திருச்சி ரயில்வே காவல்துறை கோட்டங்களில் சிறப்பாகச் செயல்பட்ட காவலர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கினார். 

அப்போது காவலர்கள் மத்தியில் பேசியவர், ``இங்குக் கொடுப்பது எல்லாம் வெகுமதி அல்ல. இது சொற்ப தொகை அவ்வளவுதான். நீங்கள் செய்த உழைப்புக்காக உங்களை மதித்துத் தரப்படுகின்ற சிறிய தொகைதான். யாரும் பணத்தை எதிர்பார்த்து வேலை செய்யாதீர்கள். ஒவ்வொரு ரூபாயையும் ஒவ்வொரு நொடியாக மதித்து வேலை செய்ய வேண்டும். மக்களுடைய வரிப் பணம் உங்களுக்கு வருகிறது. இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு மக்களுக்கு வேலை பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உழைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதையே போலீஸார் மதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதுதான் நான் உங்களுக்குத் தரும் அட்வைஸ். ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர், காவலர்கள்தான் உண்மையான போலீஸ். எனக்குக் குண்டர் சட்டத்தில் நம்பிக்கையில்லை" எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தான் பணிபுரிந்த காலத்தில் சட்டத்துக்கு உட்பட்டு, முழுமனதோடு செயல்பட்டேன். தற்போது முழு மனநிறைவுடன் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன். பணிபுரியும் போது உயர் அதிகாரிகளால் எனக்குப் பிரச்னை இருந்தது. தமிழக அரசாலோ, அரசியல்வாதிகளோ தொந்தரவுகள் ஏற்பட்டது கிடையாது. காவலர்களுக்குப் பணிச்சுமை இருப்பது உண்மைதான். சட்டம் என்ன சொல்கிறோதோ அதற்கு உட்பட்டுச் சிந்தித்து காவலர்கள் செயல்பட வேண்டும். அதேநேரம் தங்களுக்குக் குடும்பம், குழந்தைகள் இருப்பதைக் காவலர்கள் உணர வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க