``வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த ஆட்சியர்!" நன்றி கூறும் தேனி விவசாயிகள்! | 25-year old encroachments removed by collector in Theni

வெளியிடப்பட்ட நேரம்: 12:51 (30/11/2018)

கடைசி தொடர்பு:12:52 (30/11/2018)

``வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த ஆட்சியர்!" நன்றி கூறும் தேனி விவசாயிகள்!

``சிக்காளி குளத்தை மீட்க 25 வருஷம் ஆச்சு.!” – ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி!!

``வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த ஆட்சியர்!

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரத் தொடக்கத்தில் நடக்கும் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டமாக இருந்தாலும், மாதம் ஒரு முறை நடக்கும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டமாக இருந்தாலும், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான புகார் மனுக்கள்தாம் அதிகளவில் பெறப்படுகின்றன. புகார் மனுக்கள் பெறப்பட்டதும், அவை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, புகார் தொடர்பான விளக்கம் மாவட்ட ஆட்சியருக்கும், புகார் மனு கொடுத்த மனுதாரருக்கும் தெரிவிக்கப்படும். அந்த வகையில் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் கம்பம் அருகே உள்ள சிக்காளி குளம் ஆக்கிரமிப்பு புகார் மனு ஒன்று அப்பகுதி விவசாயிகளால் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. புகார் தொடர்பாக விசாரணை செய்து விரைவான நடவடிக்கை எடுத்து குளத்தை மீட்டுக்கொடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

25 வருஷமாப் போராடினோம்:

``தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆங்கூர்பாளையம் ஊராட்சிக்குப் பாத்தியமானது இந்தச் சிக்காளி குளம். மழைக்காலங்களில் கம்பம் மேற்குப் பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து பெருக்கெடுத்துவரும் தண்ணீர், ஓடைகள் வழியாக ஏகலூத்து ரோட்டில் அமைந்திருக்கும் ஆலமரத்துக்குளத்துக்கு வந்து சேரும். அக்குளம் நிறைந்த பின்னர், நேராக சிக்காளி குளத்துக்குத் தண்ணீர் வரும். மானாவாரிப் பயிர்களான சோளம், மொச்சை, நிலக்கடலை, கேழ்வரகு, கம்பு, தட்டாம்பயிறு, பாசிப்பயறு ஆகியவற்றை இந்தக் குளத்தில் வரும் தண்ணீர் கொண்டு பயிர் செய்வோம். மேலும், இப்பகுதி கால்நடைகளின் தாகம் தீர்க்கும் குளமாகவும் இது விளங்கி வருகிறது. ஆனால், ஆண்டுகள் ஆக, ஆக சிக்காளி குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. தொடர்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ஒருகட்டத்தில் மொத்தக் குளமும் ஆக்கிரமிப்பாளர்களின் கைவசம் சென்றது. குளத்துக்குத் தண்ணீர் வந்தால் தானே ஆக்கிரமிப்பாளர்களுக்குச் சிக்கல் வரும். அதனால், தண்ணீர் வரும் ஓடையையும் மறைத்து விவசாயம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் குளத்தை நம்பி நூற்றுக்கணக்கான மானாவாரி விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல், பல விவசாயிகளின் வாழ்வாதாரமும் உள்ளது.

எச்சரிகை பலகை - விவசாயிகள் மகிழ்ச்சி

`ஆக்கிரமிப்பை அகற்றி சிக்காளி குளத்தை மீட்டுக்கொடுங்கள்' எனக் கேட்டு எத்தனையோ அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இதனால், கடந்த பிப்ரவரி மாதம் பதவியேற்ற ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் மனு கொடுத்தோம். அதிகாரிகளைச் சம்பந்தப்பட்ட இடத்துக்கு உடனே அனுப்பி, ஆக்கிரமிப்பை எடுக்க நடவடிக்கை எடுத்தார். தற்போது தண்ணீர் ஓடையும் மீட்கப்பட்டது, குளமும் மீட்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைத்திருக்கிறார்கள். சிக்காளி குளத்தை மீட்க 25 வருஷமாப் போராடினோம். இப்போதான் எங்களுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆட்சியருக்கு எங்கள் நன்றி” என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள் அப்பகுதி விவசாயிகள்.

அரசாணை எண்: 540

நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கொண்டுவரப்பட்டதே அரசாணை எண் 540. இதன்படி நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் உடனே அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க அரசாணை வழிவகுக்கிறது. அரசாணை எண் 540-ன்படி சிக்காளி குளம் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படும் போது, உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, வருவாய் ஆய்வாளர்  பரமசிவம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், பாஸ்கரன் (கிராம ஊராட்சி) ஆகியோர் உடனிருந்தனர். கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்  முத்துப்பாண்டி தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு வழங்கினார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடர்ந்து புகார்கள் கூறப்படும் நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி விவசாயிகளுக்கு மீண்டும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது போன்று,  தமிழகம் முழுவதிலும் உள்ள எண்ணற்ற நீர்நிலைகளி்ன் ஆக்கிரமிப்புகளையும் மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார்கள் தேனி மாவட்ட விவசாயிகள்.


டிரெண்டிங் @ விகடன்