போல்டர் செக்டேம் திட்டம்... கௌசிகா நதியை மீட்டெடுக்குமா? | A new check dam constructed for renovating Kousika River

வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:13:20 (30/11/2018)

போல்டர் செக்டேம் திட்டம்... கௌசிகா நதியை மீட்டெடுக்குமா?

சிதைந்து போன கௌசிகா நதியை மீட்பதற்காக போல்டர் டேம் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகின்றனர் நதிகள் புனரமைப்புக் குழுவினர். இது பயனளிக்கக் கூடிய திட்டம்தானா?

போல்டர் செக்டேம் திட்டம்... கௌசிகா நதியை மீட்டெடுக்குமா?

கோவையில் நொய்யல் ஆறு, பவானி ஆறு, கௌசிகா நதி என மூன்று நீராதாரங்கள் கொங்கு நாட்டுக்கு வளம் சேர்ப்பவை. அவற்றில் நொய்யல் மற்றும் பவானி ஆகிய இரு ஆறுகளும் அனைவருக்கும் நன்கு தெரிந்ததே. ஆனால், கௌசிகா நதி பற்றிச் சிலருக்குத்தான் தெரியும். இந்நதியானது மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள குருடி மலையில் உருவாகி கிட்டத்தட்ட 49.8 கிலோமீட்டர் பயணித்து நொய்யலைச் சென்றடைகிறது. சரியான மழைப்பொழிவு இல்லாததால் நதியில் நீர்வரத்து குறைந்து, வறண்டு காணப்படுகிறது. அவற்றின் நீர்வழித்தடங்களில் சில ஓடைகள் காணமாலே சென்றுவிட்டன. ஒரு சில ஓடைகளில் பிளாஸ்டிக் கழிவுகள், கழிவு நீர் சாக்கடைகள் எனப் பல்வேறு காரணங்களால் நதியின் ஓடைகள் உருமாறி சென்றுவிட்டன.

அவற்றை மீட்டெடுக்கத் தன்னார்வலர்களும், கௌசிகா நதி நீர் மீட்புக் குழுவும் களமிறங்கி பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றனர். நதியைப் புனரமைக்க 87 கோடி ரூபாய் மதிப்பீடு ஆகும் என்று கணக்கிட்டு, அதனுடைய திட்ட அறிக்கையை அரசுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அதிலொன்றுதான் போல்டர் செக்டேம் என்ற தடுப்பணை. இந்தத் தடுப்பணைகள் மூலம் மழைநீரை நீர்துளைக் கிணறு மூலம் சேகரிக்கச் செய்யலாம். மேலும், நிலத்தடி நீர்மட்டத்தையும், ஓடைகளையும் காக்க முடியும். இது குறித்து வாழும் கலை அமைப்பின் நதி புனரமைப்பு ஒருகிணைப்பாளர் மணிவண்ணன் கூறுகையில், ``கௌசிகா நதியின் கிளைகள் 593 கிலோமீட்டர்  நீளத்துக்கு ஓடைகளாக இருக்கின்றன. அதில் 63 பஞ்சாயத்துகள் அடங்குகின்றன. ஒவ்வொரு பரப்புக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் கிணறுகள் அமைப்பது மண்ணின் தன்மையும், ஆழத்தையும் பொறுத்து அமைகிறது. கிளையின் ஓடைகளில் 526 போல்டர் செக்டேம் அமைக்கத் திட்டமிட்டு உள்ளோம். ஊரக வளர்ச்சித்துறையின் துணையோடு 110 போல்டர் டேம்களை அமைக்க ஆர்டர் வாங்கி இருக்கிறோம்; அதில் 60 முடிக்கப்பட்டுத் தற்போது செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை முடிக்க 4 ஆண்டுகள் ஆகும். ஒரு போல்டர் டேம் அமைக்க 97,000 ரூபாயும், ரீசார்ஜ் வெல் அமைக்க 91,000 ரூபாயும் செலவாகுகிறது. மொத்தத் திட்டத்தை முடிக்க கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று அறிக்கையில் கூறியிருக்கிறோம்.

கௌசிகா நதி - போல்டர் செக்டேம்

கடந்த ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பின் கீழ் செயல்படுத்தி வருகிறோம். இதன் அமைப்பு 20 அடி நீளமும்,12 அடி ஆழமும், 6 அடி அகலம் கொண்ட தடுப்பணைக் கருங்கற்கள் மூலமாகவும், கூழாங்கற்கள் மூலமாகவும் அமைக்கப்படுகிறது. அதிலிருந்து 20 மீட்டர் உறிஞ்சு துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு மழை நீர் சேகரிக்கப்படுகிறது. மழைக்காலங்களில் ஓடைகளில் செல்லும் மழைநீரில் வரும் கழிவுகள் வடிகட்டப்பட்டு நன்னீர், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடியில் சேமித்து வைக்கப்படுகிறது. இதுவரை நாங்கள் வெள்ளமடை, வடுகபாளையம், கிட்டாம் பாளையம், கொளத்துபாளையம், பி.ஜி புதூர், மசகவுண்டன் செட்டிபாளையம், செம்மாண்டம் பாளையம், பதுவம்பள்ளி, காட்டம்பட்டி, குப்பே பாளையம், கீரணத்தம், அத்திபாளையம், அன்னூர் எஸ்.எஸ். குளம் போன்ற இடங்களில் பணிகள் முடிந்துள்ளன. மற்ற இடங்களில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மழைக்காலத்துக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான நிதியை அரசாங்கம் விரைவில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்கிறார் மணிவண்ணன்.

kousika river

ஆறுகள் ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் மூலமாக நீர் செறிவூட்டும் வடிகால் திட்டம் வேலூர் மாவட்டத்தில் பயனளித்தும் சாதனையும் படைத்துள்ளது. இதுகுறித்து குளத்துபாளையம் வெற்றிவேல் கூறுகையில், ``நாங்கள் பல கிராமங்களில் உள்ள விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் பல்வேறு விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள். ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நன்னீரைச் சேமிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருகிறது. இதேபோல் செய்த வெள்ளமடையில் நல்ல பலனை அளித்துள்ளது. சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையில் போல்டர் டேம்கள் வழியாக வந்த மழைநீரைச் சேகரித்தோம். சில நாள்களுக்குப் பிறகு பக்கத்துக் கிணற்றில் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. இதுவே பெரிய வெற்றிதான்" என்கிறார்.


டிரெண்டிங் @ விகடன்