` ஊருக்குள்ள நுழையவே முடியலண்ணே...! '  - டெல்டாவில் கலங்கிய நடிகர் சூரி | Actor suri contribution for the gaja cyclone relief

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:48 (01/12/2018)

` ஊருக்குள்ள நுழையவே முடியலண்ணே...! '  - டெல்டாவில் கலங்கிய நடிகர் சூரி

` சொத்து சுகத்தைச் சேர்த்து என்ன பண்ணப் போறோம். இதுக்கு மேல துயரப்பட என்ன இருக்கு?' என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

` ஊருக்குள்ள நுழையவே முடியலண்ணே...! '  - டெல்டாவில் கலங்கிய நடிகர் சூரி

டெல்டா மாவட்ட மக்களுக்குக் கடந்த மூன்று நாள்களாக ஆறுதல் கூறி வருகிறார் நடிகர் சூரி. ' ஊருக்குள் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிப் போய்விட்டது' எனக் கண்கலங்குகிறார் சூரி. 

காவிரி டெல்டா பகுதிகளில் கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர்செய்யப்படவில்லை. மின் கம்பங்களைச் சீர்செய்வது, மரங்களை அப்புறப்படுத்துவது என தமிழக அரசின் நிவாரணப் பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும், மக்களின் குமுறல் இன்னும் தணியவில்லை. அரசும் தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும், டெல்டா மாவட்ட மக்களுக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில், கஜா பாதித்த தஞ்சை கிராமங்களில் கடந்த மூன்று நாள்களாகத் தங்கியிருந்து உதவி செய்து வருகிறார் நடிகர் சூரி. 

சூரியிடம் பேசினோம். `` இந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்கே மிகவும் வேதனையாக இருக்கிறது. தஞ்சாவூரில் பல கிராமங்களைச் சுற்றி வந்துவிட்டேன். மிகப் பெரிய துயரத்துக்கு இந்த மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். ஊருக்குள் நுழையவே முடியவில்லை. இந்த மக்கள் மீண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆகும். டெல்டா மாவட்ட மக்கள் பேரிழப்பை சந்தித்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் கதைகளையும் காதுகொடுத்துக் கேட்க முடியவில்லை. நான் வளர்த்த தென்னம்பிள்ளை, என்னைக் கைவிட்டுப் போயிருச்சு, இன்னும் சாக மாட்டாம உக்காந்திருக்கோம்யா' என மக்கள் கதறியழுகிறார்கள். சோறு கொடுத்தால்கூட வாங்க மறுக்கிறார்கள். `எங்களைத் தேடி வந்து பாக்கறீங்களே அது போதும்... இப்படியொரு ஊரு இருக்கறதே இந்த அரசியல்வாதிகளுக்குத் தெரியாம போயிருச்சுய்யா. 50 வீடுக இருக்கற பகுதிகளையெல்லாம் கண்டுக்க மாட்டேங்கறாங்க. நாங்களும் மனுஷங்க தானே...எங்களுக்குப் பிச்சையெடுத்துப் பழக்கம் இல்லைண்ணே...' எனக் கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. அந்த மக்களோடுதான், மூன்று நாள்களாகத் தங்கியிருக்கிறேன். முதலாளி, தொழிலாளி வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் ஒரே மாதிரியான நிலைக்குக் கஜா புயல் கொண்டு வந்துவிட்டது. 

கஜா பாதித்த பகுதிகளில் நடிகர் சூரி

தென்னை மரங்களை இழந்த ஒரு விவசாயி என்னிடம் பேசும்போது, `` நான் கட்டியிருக்கிற இந்த வெள்ளை வேட்டிதான் கடைசின்னு நினைக்கிறேன். இனி இதைக் கட்டறதுக்கு எனக்கு லாயக்கில்லை' என வேதனைப்பட்டார். அரசாங்கம் அளவுக்கு நம்மால் உதவி செய்ய முடியாது. என்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்காகத்தான் இங்கு வந்தேன். இந்த மூன்று நாள்களில் நான் உணர்ந்துகொண்டது ஒன்றைத்தான், ` சொத்து சுகத்தைச் சேர்த்து என்ன பண்ணப் போறோம். இதுக்கு மேல துயரப்பட என்ன இருக்கு?' என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். இந்த மக்கள் மீண்டு வருவதற்கு இன்னும் எத்தனை நாள்களாகும் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டு காலம் வாழ வைத்த தென்னை மரங்கள் ஏக்கர் கணக்கில் அழிந்துவிட்டது. 

அந்த இடங்களையெல்லாம் சுத்தம் செய்து கொடுத்தால் போதும் என அந்த மக்கள் வேண்டுகோள் வைக்கிறார்கள். கையில் இருக்கும் மிச்ச மீதி பணத்தைக் கொடுத்து, சுத்தம் செய்யச் சொல்லி அழுகிறார்கள். இத்தனைக்கும் அனைத்தும் பயன்படக் கூடிய நல்ல நிலையில் இருக்கும் மரங்கள் அவை. `டீசல் காசு கூட கொடுத்துவிடுகிறோம். தென்னம்பிள்ளைகள் பிணமாகக் கிடப்பதைப் பார்க்க முடியலய்யா. அதை அப்புறப்படுத்திக் கொடுங்கய்யா' எனக் கலங்குகிறார்கள். யாரைப் பார்த்தாலும் அழுகையையும் துயரத்தையும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நேற்று வரையில் முதலாளியாக இருந்தவர்களெல்லாம் இன்று தொழிலாளியாக மாறிவிட்டார்கள். அனைவரும் சமமாக இருப்பது நல்ல விஷயம்தான். இப்படிப்பட்ட துயரம் மூலமாக, இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. நல்ல மனநிலைக்கு அந்த மக்கள் வர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்' எனக் கலங்கியபடியே பேசி முடித்தார் சூரி.