வைத்தி எப்படிப்பட்டவர்? - அதிர்ச்சியை வெளியிடும் காடுவெட்டி குருவின் மருமகன் | Who is he? - Manoj, the son-in-law of Kaduvetti who publishes shocking information.

வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (30/11/2018)

கடைசி தொடர்பு:13:04 (30/11/2018)

வைத்தி எப்படிப்பட்டவர்? - அதிர்ச்சியை வெளியிடும் காடுவெட்டி குருவின் மருமகன்

காடுவெட்டியே எங்களது குடும்பத்தை சாமியாகப் பார்த்தது. ஆனால், இன்று எங்களைத் துரோகியாக பார்க்க வைத்ததற்குக் காரணம் கட்சியில் உள்ள முக்கியத் தலைவர்கள்தான். ஆரம்பத்திலிருந்தே குருவின் குடும்பத்தை அழிக்க நினைத்தவர் வைத்திதான்" என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டிருக்கிறார் குருவின் தங்கை மகனும் மருமகனுமான மனோஜ்.

குடும்பத்தினருடன் குருவின் தங்கை மகனும் மருமகனுமான மனோஜ்

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது பாதுகாப்பில்லாமல் தவிக்கின்றனர். தங்களைக் கிராமத்திலிருந்து அடித்து வெளியேற்றுவதாக அவர்கள் கதறுகிறார்கள். என்ன நடந்தது என்று குருவின் தங்கை மகனும் மருமகனுமான மனோஜிடம் பேசினோம்.

``நான் பிறந்த நாள் முதல் என்னோட மாமா குருவோடுதான் அதிகம் இருந்தேன். நானும் விருதாம்பிகையும் சின்ன வயதிலிருந்து விரும்பினோம். அதனால் திருமணம்செய்து கொண்டோம். எனது மாமன் மகளைத் திருமணம் செய்துகொள்ள யாரிடம் கேட்க வேண்டும். ஏன் எங்களை வைத்தி மிரட்டுகிறார் என்று தெரியவில்லை. காடுவெட்டி கிராமமே எங்களது குடும்பத்தை தெய்வமாக‌ பார்த்தது. ஆனால் இன்று விரோதியாகப் பார்ப்பதற்கான காரணம் மாநில துணைப் பொதுச்செயலாளர் வைத்திதான்" என்று பட்டியலிடத்தொடங்கினார்.

காடுவெட்டியின்  மருமகன் மனோஜ்

``முதலில் கட்சித் தலைமையை நம்ப வேண்டாம். எப்போது வேண்டுமானாலும் செல்லாக்காசாக வெளியில் அனுப்பிவிடும் என்று என் மாமாவிடம் வைத்தி அடிக்கடி சொல்லிவந்தார். அதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். என் மாமாவின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஒரு பைசாகூட கொடுத்து உதவி செய்யாதவர்கள். ஆகவே, காடுவெட்டியார் வைத்த கடனையோ அவரது குடும்பத்தையோ காப்பாற்றும் என்று நம்பவேண்டாம். ராமதாஸ் எந்த வகையிலும்  உதவி செய்யமாட்டார் என்று ஊர் நாட்டாமைகளையும் காடுவெட்டியார் குடும்பத்தினரையும் ஒன்றாகக் கூட்டி காடுவெட்டியார் பெயரில் அறக்கட்டளை தொடங்க அடித்தளமிட்டதுடன் தன்னையும் உறுப்பினராக சேர்க்கச் சொல்லி, அதற்குத் தேவையான ஆதார் அட்டை உள்ளிட்ட என்ன ஆதாரம் தேவையோ கொடுக்கிறேன் என்று கூறிய வைத்தி, பின்னர் ஓரிரு வாரங்களில் நான் வேண்டாம். காடுவெட்டியார் குடும்பம் மட்டும் இருக்கட்டும் என்று சொன்னதை சந்தர்ப்பவாதி வைத்தி மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை. 

இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த காடுவெட்டியார் சேர்த்த சொத்து என்ன. ஒருமுறைகூட சட்டமன்ற உறுப்பினராகாத நீங்கள், சேர்த்து வைத்திருக்கும் பலகோடி சொத்துகள் என்ன என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும். இதைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட இருக்கிறேன். ஏப்ரல் மாதம்  12-ல் இருந்து மே மாதம்  25-ம் தேதிவரை அப்போலோ மருத்துவமனையில் என் மாமாவுக்கு ஆன மருத்துவச் செலவுகள் அனைத்தையும்  ஏற்றுக்கொண்டது அன்புமணிதான். ஆனால் வைத்தி, நீ என்ன செய்தாய். காடுவெட்டியார் பெயரைச்சொல்லி நூற்றுக்கணக்கான வன்னிய சொந்தங்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொடுத்த பணத்தை அத்தனையும் எடுத்துக்கொண்டார்.

25 வருடங்களாக காடுவெட்டியாருடன் பயணித்து வந்ததாகப் பொய் சொல்லி வருகிறார். உங்களுக்கு வெக்கமாக இல்லையா. எங்களுக்குத் தெரிந்து 2005-ல் இருந்துதான் பழகி வந்தார். அதுவும்கூட அதற்கு முன்பாக காடுவெட்டியாருடன் நெருக்கமாக இருந்த பலபேரை நயவஞ்சகமாக அப்புறப்படுத்திவிட்டு அதன் பிறகுதான் காடுவெட்டியாருடன் நெருக்கமானீர் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காடுவெட்டியார் பெயரைச் சொல்லி நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வசூலிக்கலாம். ஆனால், காடுவெட்டியார் வைத்திகுடும்பம் மட்டும் வசூலிக்கக்கூடாது என்று உத்தரவிட என்ன தகுதி உள்ளது நன்றி கெட்ட வைத்திக்கு. திட்டமிட்டு என் மாமாவின் குடும்பத்தை அழித்தவர் வைத்தி. அவருடைய சந்தர்ப்பவாத செயலையும் காடுவெட்டியார் குடும்பத்துக்கு செய்த சூழ்ச்சி நிறைந்த வன்மத்தையும் மறக்கமாட்டோம். வைத்தி சேர்த்துள்ள சொத்துகளையும் விரைவில் வெளியிட இருக்கிறேன்'' என கொதித்தார்.

இந்த குற்றச்சாட்டுக் குறித்து மாநில துணைப் பொதுச் செயலர் வைத்தியிடம் கேட்டபோது, ``25 வருஷமா குருவோடு நான் இருந்தவன். வேண்டுமென்றே இவர்கள் என் மீது பழிபோடுகிறார்கள். குருவை தனியாகப் பிரித்துவந்து வன்னியர் சங்கத்தை தனியாக நடத்துன்னு அவரின் குடும்பத்தினர் என்னை வற்புறுத்தினர். ஆனால், மறுத்துவிட்டேன். இந்தக் குடும்பம் என்மேல் கோபப்படுவதற்கு காரணம் இதுதான். ராமதாஸுக்கு விசுவாசமாக நடக்கனும்னு குரு சொன்னாரு. அதன்படி ராமதாஸுக்கும் குருவுக்கும் விசுவாசமாக நடந்தேன்'' என்று முடித்தார்.