நாற்காலிகள் வீச்சு... நிர்வாகியின் மண்டை உடைப்பு! - ரணகளமான காங்கிரஸ் கூட்டம் | Violence in congress party meeting at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:14:00 (30/11/2018)

நாற்காலிகள் வீச்சு... நிர்வாகியின் மண்டை உடைப்பு! - ரணகளமான காங்கிரஸ் கூட்டம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கூட்டம் நடைபெற்ற இடமே போர்க்களம் போல காட்சியளித்திருக்கிறது. இதில் தொண்டர் ஒருவரின் மண்டையும் உடைந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த ரகளை

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்நிலையில் அதற்கான ஆலோசனைக் கூட்டமும் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு டெல்லியிலிருந்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் சஞ்சய்தத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்தும், அதற்காக வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்கள். 

கூட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டு இருக்க, திடீரென ஒரு பிரிவினர் மட்டும் வடக்கு மாவட்டத் தலைவர் கோபி கட்சிக்கு நியாயமாக நடப்பதில்லை என்றும், ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார் என்றும் கூச்சலிடத் தொடங்கினார்கள். மேலும் கோபியின் செயல்பாடுகள் முற்றிலும் அதிருப்திகரமானதாக இருப்பதாகவும் இப்படியே சென்றால் திருப்பூரில் காங்கிரஸ் கட்சியே இல்லாமல் போய்விடும் என்றும் சஞ்சய் தத்திடம் புகார் தெரிவித்தனர். 

இதைத்தொடர்ந்து கோபியின் ஆதரவாளர்கள் அவர்களை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட, நிலைமை இருதரப்புக்கும் இடையே கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் தங்களுக்குள் ஆவேசமாக அடித்துக்கொள்ள தொடங்கினார்கள். மேலும் அரங்கத்தில் நிறைந்திருந்த காலி இருக்கைகளை தூக்கி எறிந்தனர். மேடையிலிருந்து இந்தச் சம்பவத்தை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டு இருந்த அகில இந்தியச் செயலாளர் சஞ்சய்தத் நிகழ்ச்சியை அத்துடன் முடித்துக்கொண்டு அரங்கத்திலிருந்து அவசரமாக வெளியேறினார்.

இருதரப்பினர் இடையேயான இந்த மோதலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஈஸ்வரன் என்பவரது மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். அகில இந்திய செயலாளர் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.