தூத்துக்குடி வியாபாரிக்கு போலீஸ் கண்முன்னே நடந்த விபரீதம்! | A man was died when he was riding a bike in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (30/11/2018)

தூத்துக்குடி வியாபாரிக்கு போலீஸ் கண்முன்னே நடந்த விபரீதம்!

தூத்துக்குடியில் வாகனச் சோதனைக்கு பயந்து பைக்கைத் திருப்பியபோது எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வியாபாரியை கொன்ற பஸ்

தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதி. இவர் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு தனது வீட்டுக்குச் செல்வதற்காக தூத்துக்குடி ஜெயராஜ் சாலையிலிருந்து புதிய பேருந்துநிலையம் செல்லும் பாலம் வழியாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் வாகனச் சோதனையில் மத்திய பாகம் காவல்நிலையத்தின் உதவி ஆய்வாளர் ஊர்க்காவல் பெருமாள் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் ஹெல்மெட் அணியாமல் வந்த முப்புடாதி, போலீஸாரைப் பார்த்ததும் தனது பைக்கை இடதுபுறமாகத் திருப்பினார்.

அப்போது, ஸ்பிக் நகரிலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக கோவில்பட்டிக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது. போலீஸாரின் கண்முன்னே நடந்த இந்த விபத்தில் முப்புடாதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸாரின் வாகனச் சோதனைக்கு பயந்து, தனது பைக்கைத் திருப்பியதால்தான் இவ்விபத்து நடந்தாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுக்காட்சிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

வியாபாரி முப்பிடாதி``வாகனச் சோதனை என்ற பெயரில் பாலங்களின் தொடக்கப்பகுதி, முடிவுப் பகுதி, சாலைகள் சந்திப்புப் பகுதிகள், வளைவுப்பகுதி, வேகத்தடைக்கு முன்பகுதி, பின் பகுதி என முக்கியமான இடங்களில்தான் போலீஸார் சோதனை மேற்கொள்கின்றனர். இதனால், ஹெல்மெட் அணியாதவர்கள், இன்சூரன்ஸ் காலவதி ஆகிய வாகன ஓட்டிகளும் போலீஸாரைப் பார்த்த பதற்றத்தில் பைக்கைத் திருப்பும் போதும், வேகமாகக் கடந்து செல்ல முயற்சி செய்யும்  போதும் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு விடுகிறது. அதே நேரத்தில் போலீஸார் சாதாரணமாக நின்று கொண்டிருந்தாலும் பயத்தில் பைக்கைத் திருப்பி விபத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

அதே போல, சில போலீஸார் எதிரே வரும் வாகனங்களை கையசைத்து நிறுத்தச் சொல்லி சோதனையில் ஈடுபடுவதும், வேகமாக வரும் வாகனங்களை லத்தியைக் காட்டி நிறுத்தச் சொல்வதும், அவ்வாறு நிறுத்தாமல் செல்ல முயற்சி செய்யும் வாகனங்களை விரட்டிப் பிடிக்கும் நோக்கில் பின் தொடர்வதும் இது போன்ற விபத்துகளுக்குக் காரணமாகி விடுகின்றன.

இதில், நிறுத்தாமல் போகிற வாகனங்களை கண்டுகொள்ளாமல் இருந்துகொண்டு, கையசைவினைப் புரிந்து கொண்டு நிறுத்தும் வாகனங்களை மட்டும் சோதனையில் ஈடுபட்டுப் பிரச்னையில் சிக்காத போலீஸாரும் உண்டு. வாகன ஓட்டிகள் சாலைவிதிகளை போலீஸாருக்காக இல்லாமல் தங்களது பாதுகாப்புக்காக எனக் கருதி, ஹெல்மெட் அணிந்து விதிகளை முறையாகப் பின்பற்றும் போது இதுபோன்ற தேவையற்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்”என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க