வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:11:47 (01/12/2018)

ஓடும் பேருந்திலிருந்து கழன்று ஓடியது டயர்!- 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய அரசு டிரைவர்

பேருந்து

பழநியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநர் மணி என்பவர் இயக்கியுள்ளார். திண்டுக்கல் - திருச்சி சாலையில், தாமரைப்பாடி பிரிவில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்கச் சக்கரம் சாலையில் வலதுபுறத்தில் கழன்று ஓடியது. சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றால் உங்களுக்குச் சிரிப்பு வரலாம். நெடுஞ்சாலையில் நீங்கள் பயணித்துக்கொண்டிருக்கும் பேருந்தின் முன்பக்கச் சக்கரம் இப்படிக் கழன்று ஓடினால் உங்களுக்கு எப்படி இருக்கும். 30க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். நிலைமையை உணர்ந்த ஓட்டுநர் சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்தினார். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. 

பேருந்தின் சக்கரம் 400 மீட்டர் தூரம் உருண்டு சென்று சோளக்காட்டுக்குள் புகுந்தது. தங்கள் உயிரைக்காப்பாற்றிய பேருந்து ஓட்டுநருக்குப் பொதுமக்கள் நன்றியைத் தெரிவித்தனர். பயணிகள் அனைவரும் வேறு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். அரசுப் பேருந்தின் பராமரிப்பு சரியில்லை என ஓட்டுநர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளில் மழைக்காலப் பயணங்கள் `பேருந்துக்குள் மழை’ என்று கூறும்படிதான் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லிலிருந்து திருச்சி சென்ற அரசுப் பேருந்தை மழையில் நனைந்த படி ஓட்டுநர் ஓட்டிய வீடியோ வெளியானது. பேருந்தின் மேற்கூரை பறந்த சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன. திறமையான ஓட்டுநர்களால் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன. பயணிகளின் உயிரைக்காப்பாற்றும் மணி போன்ற ஓட்டுநர்களுக்கு நமது பாராட்டுகளை தெரிவித்தாக வேண்டும்.