`28 வருடம் போதும்' - ஆளுநருக்குக் கோரிக்கை விடுக்கும் விஜய் சேதுபதி! #28YearsEnoughGovernor | actor vijaysethupathi supports to release rajiv gandhi convicts

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (30/11/2018)

கடைசி தொடர்பு:15:12 (30/11/2018)

`28 வருடம் போதும்' - ஆளுநருக்குக் கோரிக்கை விடுக்கும் விஜய் சேதுபதி! #28YearsEnoughGovernor

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்கக் குரல் கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. 

பேரறிவாளன்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளாகப் பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனத் தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த 7 பேருக்கும் ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன. இதையடுத்து, ஏழுபேரின் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்யலாம் என சில மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனிடையே தமிழக அரசின் சார்பிலும் பரிந்துரைக்கப்பட்டது. 7 பேரின் குடும்பங்கள் சார்பிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இவர்கள் இல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகள் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் ஆளுநருக்குக் கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் இவர்களின் விடுதலை தொடர்பாக ஆளுநர் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, எழுவர் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ட்விட்டரில் #28YearsEnoughGovernor என்று ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு எழுவர் விடுதலைக்காகக் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆளுநருக்குக் கடிதம் எழுதும் போராட்டம் நடத்தப்பட்டதைப் போல் இதுவும் போராட்டமாக கருதப்பட்டு வருகிறது. எழுவர் விடுதலைக்காக #28YearsEnoughGovernor ஹேஷ்டேக் மூலம் பலர் ட்விட்டரில் குரல் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய்சேதுபதி எழுவர் விடுதலைக் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``இது ஒரு தமிழ் பிரச்னை அல்ல. மனித உரிமைகளைக் கருத்தில் கொள்வதற்கான கோரிக்கை இது. மனித உரிமை அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய பரிசீலிக்க வேண்டும். ஆளுநர் தயவு செய்து இதில் கருணை முடிவு எடுக்க வேண்டும். உடனடியாக விடுதலைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். இதுபோல் பல முறை, எழுவர் விடுதலைக்காக விஜய்சேதுபதி பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இயக்குநர் ராமும் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``திறக்கட்டும் கதவுகள். கவர்னரை சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க