வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:15:20 (30/11/2018)

`மேகதாதுவில் அணை கட்டினால் பிரச்னைதான்’ - எதிர்க்கும் முதல்வர் நாராயணசாமி

``மேகதாதுவில் அணை கட்டினால் பிரச்னைதான்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் 6,000 கோடி ரூபாய் செலவில் புதிய அணை ஒன்றைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான வரைவுத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்ய இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ``காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகள் கட்டக் கூடாது என்ற உத்தரவு ஏற்கெனவே அமலில் உள்ளது.

கர்நாடகா

இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. அங்கு அணை கட்டினால் தமிழகத்துக்கு மட்டுமின்றி, புதுச்சேரிக்கும் நீர் வருவது குறைந்துவிடும். தேவைப்பட்டால் சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி தமிழகத்துடன் இணைந்து வழக்கு தொடுப்போம். உபரி நீரை வழங்காமல் காவிரி நீர் மேலாண்மை வாரியம் கூறியுள்ளபடி எந்தெந்த மாதத்தில் எவ்வளவு நீரை வழங்க வேண்டுமோ அவ்வளவு நீரை வழங்க வேண்டும். தமிழக அரசும் புதுச்சேரிக்கு உரிய நீரை வழங்க வேண்டும். கேரளா புயல் நிவாரணத்துக்கு அரசு ஊழியர்கள், வணிகர்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி உரிமையாளர்கள், வங்கிகள், மத்திய அரசின் நிறுவனங்கள் நிதியுதவி வழங்கின. அதை அடுத்த வாரம் கேரளா சென்று வழங்க உள்ளோம். அதுபோல் காரைக்காலில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும். இதற்காக முதல்வர் அலுவலகத்தில் பணி நாள்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை ஊழியர்கள் செயல்படுவார்கள்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க