"பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுபவர்கள், எதுவுமே புரியாதவர்கள்" கிருத்துதாசு காந்தி | These guys know nothing about anything slams Christodas Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (30/11/2018)

கடைசி தொடர்பு:17:45 (01/12/2018)

"பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசுபவர்கள், எதுவுமே புரியாதவர்கள்" கிருத்துதாசு காந்தி

பட்டியலில் இருப்பதால் எந்த விதமான இழிவும் இல்லை. உலகம் முழுவதும் மக்கள் ஒடுக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். அவர்கள் என்ன தங்களுடைய அடையாளத்திலிருந்து விலகியா சென்றுவிட்டார்கள்?

நீண்டகாலமாக வெறும் கொள்கைப் பிரசாரமாக மட்டுமே இருந்துவந்த குறிப்பிட்ட சில சமூகங்களின் பட்டியல் வெளியேற்றம், இன்று தீவிர அரசியல் இயக்கமாக மாறி சில அரசியல் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. `பட்டியல் தேவையில்லை; இடஒதுக்கீடு பலன் தரவில்லை; மாறாக இழிவை மட்டுமே எங்களுக்குத் தந்துள்ளது' என மிகத் தீவிரமாகப் பட்டியல் வெளியேற்றப் பிரசாரங்கள் நடைபெற்று வருகிற சூழலில், ஏன் பட்டியலிலிருந்து வெளியேறக் கூடாது என்பது தொடர்பாகவும் பலர் பேசி வருகின்றனர். அவர்களில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கிருத்துதாசு காந்தி முக்கியமானவர். பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை பற்றி அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

`` `தாழ்த்தப்பட்டவர் பட்டியலில் இருப்பதுதான் எங்களுக்கு இழிவு, இடஒதுக்கீடு வேண்டாம்' என்று சமீபகாலமாகப் பேசப்பட்டுவரும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``தாழ்த்தப்பட்டவர் பட்டியல் என்பது தீண்டாமையை அனுபவித்தவர்களுக்காக உருவாக்கப்பட்டது. நாங்கள் தீண்டாமையை அனுபவிக்கவில்லை என்பதை மட்டும்தான் பட்டியல் வெளியேற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்களுக்குத் தாழ்த்தப்பட்டவர் பட்டியல் என்றால் என்னவென்பதே தெரியாது. பட்டியல் சாதிகள் என்றால் என்ன? அது எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் அவர்களுக்குப் போதிய தெளிவு கிடையாது. பட்டியலில் இருப்பதனால்தான் இழிவு என்பது முற்றிலும் பொய். பட்டியல் வெளியேற்றம் என்று சொல்வது சாதி இல்லாதவனாக இருந்து சாதிக்குள் செல்கிறேன் என்பதுதான் பொருள். இது, ஒருவிதமான மனநோய். பட்டியலில் இருப்பதால் எந்த விதமான இழிவும் இல்லை. உலகம் முழுவதும் மக்கள் ஒடுக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். அவர்கள் என்ன தங்களுடைய அடையாளத்திலிருந்து விலகியா சென்றுவிட்டார்கள்? இது, ஒரு பண்பாட்டு மீட்சி, அடையாள மீட்பு எனச் சொல்கிறார்கள்? எந்த அடையாளத்தை மீட்கப்போகிறார்கள் என்பதை அவர்களால் தெளிவாகச் சொல்ல முடியாது. முரண்பாடுகளை மட்டுமே கொண்டது அவர்களுடைய வாதங்கள்".

`` `இடஒதுக்கீடு பட்டியல் மக்களைக் குறுகிய வட்டத்துக்குள் அடக்கி, இழிவை மட்டும்தான் கொடுத்தது' என்று பரவலாகக்  கூறப்படுவதைப்போல் உண்மையில் பட்டியலில் இருப்பதால் இழிவு மட்டும்தான் கிடைத்ததா?"

``நாங்கள் இழிவானவர்கள் இல்லை என்கிற அவர்களுடைய ஆரம்பம் சரியானது. ஆனால், பட்டியல் இருப்பதனால் இழிவு வந்துவிட்டது என்பது ஒரு ஜோடிக்கப்பட்ட பிரசாரம். அனைத்துத் துறைகளையும் எடுத்துக்கொண்டாலுமே அதில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வல்லுநர்களாக இருக்கிறார்கள். இவையெல்லாம் பட்டியலில் இருப்பதனால்தான் நடந்தது. இடஒதுக்கீட்டை அனுபவிப்பது என்பது எப்படி இழிவாக அமையும்? இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட ஓர் உரிமை. பத்திரிகையாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்மூலம் வழங்கப்பட்ட உரிமை. அது எப்படி இழிவாகும்? அதுபோலத்தான் இடஒதுக்கீடும் ஒரு ஜனநாயக உரிமை. பட்டியலில் இருப்பதனால் இழிவு என்பது தொடர்ந்து பொய் பிரசாரங்களின் மூலம் கட்டமைக்கப்படுகிறது. பட்டியலில் இருப்பதனால் இழிவு என்பது கிடையாது".

இடஒதுக்கீடு பற்றி கிருத்துதாசு காந்தி

`` `இடஒதுக்கீட்டினால் தாழ்ந்துவிட்டோம். அதனால், எந்தவிதமான நன்மைகளும் கிடைக்கவில்லை' எனக் கூறிவருகிறார்களே?"

``இந்தப் பொய் பிரசாரங்களுக்கு எல்லாம் ஒரு காலத்தில் அவர்களுக்காகவே எதிர்ப்பு வரும். தங்களுடைய மக்களையே தடம் மாற்றிச் சென்றுகொண்டிருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும். இடஒதுக்கீட்டினால் நன்மை வரவில்லை என எப்படிச் சொல்ல முடியும்? இதற்காகத்தான் தரவுகளை வைத்துக்கொண்டு பேசுகிறோம். பட்டியல் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1954-ம் ஆண்டுதான் வருகிறது. எனவே, 1954-க்கு முன்பும் பின்பும் தாழ்த்தப்பட்டவர்களில் எத்தனை பேர் மருத்துவராக இருந்தார்கள்; அரசுப் பணிகளில் இருந்தார்கள் என்று பார்த்தால் உண்மை விளங்கும். ஒருவருடைய சமூக அந்தஸ்து என்பது இடஒதுக்கீடு என்பதனால் மட்டும் தீர்மானிக்கப்படுவது கிடையாது. இடஒதுக்கீடு என்பது ஒரு கருவி மட்டுமே. நாட்டில் உள்ள எந்த ஒரு குடிமகனும் அரசாங்கத்திடம் ஏதாவது ஒரு சலுகை அனுபவித்துக்கொண்டுதான் இருப்பார். அதுதான் குடியாட்சி. இடஒதுக்கீடு என்பதனைக் குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இடஒதுக்கீடு என்பது அவமானம். அதனால் எந்த முன்னேற்றமும் நடைபெறவில்லை எனச் சொல்வது அபத்தம். இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள்தான் இன்று ஐ.ஏ.எஸ்., மருத்துவர், பேராசிரியர் எனப் பல துறைகளிலும் கோலோச்சி இருக்கின்றனர்".

``பட்டியல் வெளியேற்றப் பிரசாரத்தின் பின்னனியில் பி.ஜே.பி. உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் பங்கு இருப்பதாகக் கூறிவருகிறீர்களே, அதன் அடிப்படை என்ன?"

``பட்டியல் வெளியேற்றப் பிரசாரத்தில், பின்னணியில், திரைமறைவில் செயல்பட்டு வந்தவர்கள் இப்போது முன்னணியிலிருந்து செயல்பட்டு வருகின்றனர். பட்டியல் வெளியேற்றம் பற்றிப் பேசுகிறவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு சில பதவி, லாபங்களுக்காக ஆசைப்பட்டுத்தான் பேசி வருகின்றனர். மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, இவர்களுடைய ஒரு கோரிக்கையைத் தங்களுடைய சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என முயற்சி செய்துவருகின்றனர். தாழ்த்தப்பட்டவர் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர வேண்டும் என்பது, அவர்களைச் சாதிமயப்படுத்த வேண்டும் என்கிற இந்துத்துவக் கொள்கைதான். இதில், தீவிரமாகச் செயல்படுகிற நபர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து வந்தவர்களாகத்தான் இருக்கின்றனர்".

``உண்மையில் பட்டியலிலிருந்து வெளியேறுவது சாத்தியமா?"

``அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றித் தெரிந்திருந்தால் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் என்றாலே என்னவென்று தெரியாது. இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்த வேண்டும். நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி எம்.பி-க்களிடமும் அதைப் பற்றிப் பேச வேண்டும். அதையெல்லாம் இவர்கள் செய்தார்களா? வெறும் பி.ஜே.பி. மட்டும் முடிவெடுக்கிற விஷயம் அல்ல இது. தாழ்த்தப்பட்டவர் பட்டியலிலிருந்து வெளியேறி இதரப் பட்டியலில் சேரப் போகிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பதும் நடக்காத காரியம். பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பட்டியலில் இருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுவும் சாத்தியப்படாது. இதையெல்லாம் தெரிந்துகொண்டு பேசுகிறார்களா அல்லது தெரியாமல் பேசுகிறார்களா என்று தெரியவில்லை".

``பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையைத் தற்போது தீவிரமாகப் பேசி வருவதற்கான காரணமாக எதைப் பார்க்கிறீர்கள்?"

``எல்லாம் இந்துத்துவ சக்திகளின் வேலையாகத்தான் இருக்கிறது. அவர்கள்தான் இந்தப் பிரசாரத்தைத் தூண்டிவிட்டிருக்கிறார்கள். இதுநாள் வரைக்கும் இவர்களுடைய கோரிக்கை எல்லாம் சில சமூகங்களை ஒன்றுசேர்த்து பொது அடையாளம் கொடுத்ததைப்போலப் பட்டியலில் உள்ள சில சமூகங்களைச் சேர்த்து பொது அடையாளம், பொதுப் பெயர் கொடுங்கள் என்பதாகத்தான் இருந்தது. அதைப் பட்டியலில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என மடைமாற்றி, தற்போது இவர்கள் தீவிரமாகக் கையிலெடுத்து அரசியல் லாபத்துக்காகச் செயல்பட்டுவருகிறார்கள்".

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்