அசுரவேகத்தில் வந்த ரயில்... தூக்கி வீசப்பட்ட ஆண் யானை! - கோவை அருகே சோகம் | Elephant died in train accident near Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:14:40 (30/11/2018)

அசுரவேகத்தில் வந்த ரயில்... தூக்கி வீசப்பட்ட ஆண் யானை! - கோவை அருகே சோகம்

ரயிலுக்குப் பலியாகும் யானைகள்

தமிழக-கேரளா எல்லையில் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற காட்டு யானை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக எல்லையையொட்டியுள்ள கேரளாவுக்குச் சொந்தமான கஞ்சிக்கோடு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகம்.
தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் ரயில்வே தடம் அந்த வனப்பகுதிக்குள் இருக்கிறது. இன்று காலை  25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று அந்த ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தது.
 
அந்த நேரத்தில் அசுர வேகத்தில் வந்த ``பாலக்காடு எக்ஸ்பிரஸ்" ரயில் அந்த யானையின் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட யானை சம்பவ இடத்திலேயே பரிதாமாக உரிழந்தது. இது தொடர்பாக அந்தப் பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கேரள வனத்துறையினர் விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அதே இடத்திலேயே யானைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

வனப்பகுதிகளுக்குள் இருக்கும் ரயில்வே தண்டவாளங்களை கடக்க முயலும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் காட்டு யானைகளின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு வனத்துறையும், ரயில்வே துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும். காட்டுக்குள் யானைக்குத் தேவையான தண்ணீர்த் தொட்டிகள் அமைப்பது, வனவிலங்குகளுக்குத் தேவையான பயிர்களைக் பயிரிடுவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை வனத்துறையும் மேற்கொள்ள வேண்டும். வனப்பகுதிகளுள் செல்லும்போது ரயிலில் வேகத்தைக் குறைத்து இயக்க ரயில்வே துறையும் முன்வர வேண்டும். அப்போதுதான் ரயிலுக்குப் பலியாகும் யானைகளை காப்பாற்ற முடியும் என்கிறார்கள் வன ஆர்வலர்கள்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க