அரசாணை ரத்து; மீண்டும் பொன்.மாணிக்கவேல்!- உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு | Madras HC appoints Pon.Manickavel as special officer for idol smuggling case

வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (30/11/2018)

கடைசி தொடர்பு:15:29 (30/11/2018)

அரசாணை ரத்து; மீண்டும் பொன்.மாணிக்கவேல்!- உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சிலைக்கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

சென்னை உயர் நீதிமன்றம்


சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை இவர் தலைமையிலான குழு மீட்டிருக்கிறது. சிலைகள் விஷயத்தில் தமிழக அரசு அழுத்தம் தருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியிருந்தார். சிலைக்கடத்தல் வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதில் தமிழக அரசுக்குத் திருப்தி இல்லை' என்று சிலைக்கடத்தல் வழக்குகளைத் தானாக முன்வந்து சி.பி.ஜ.க்கு தமிழக அரசு மாற்றியது.

பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதாக இருந்தார். ரயில்வே காவல்துறை சார்பில் அவருக்கு நடத்தப்பட்ட பிரிவு உபசார விழாவில், `இளைஞர்களை நம்பி இந்தப் பொறுப்பை விட்டுச் செல்கிறேன்’ என்று உருக்கமாக அவர் பேசியிருந்தார். 

யானை ராஜேந்திரன்இந்தநிலையில், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், இன்றுடன் பதவி ஓய்வு பெற இருந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்கு பதவியில் இருப்பார் என்றும் உத்தரவிட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், `சிலைக்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய அதிகாரிகளைக் காப்பாற்றவே தமிழக அரசு, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது. ஆனால், இந்த உத்தரவு பொருத்தமானது அல்ல; இது கொள்கை முடிவு என்ற வரையறைக்குள் வராது, இது சட்டவிரோதம் என்று கூறி தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது’’ என்றார். இதனால், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கத் தடை இல்லை என்றும் அவர் கூறினார். அதேபோல், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பிரிவு பொன்.மாணிக்கவேல் தலைமையில் இயங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.