`ராமதாஸ் சொல்வதுபோல் ஒன்றும் செய்ய முடியாது!’ ஒருதலைக் காதல் குறித்து வழக்கறிஞர் | Lawyer Sudha Ramalingam talks about growing number of one-side love murders and ways to stop them!

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (30/11/2018)

`ராமதாஸ் சொல்வதுபோல் ஒன்றும் செய்ய முடியாது!’ ஒருதலைக் காதல் குறித்து வழக்கறிஞர்

`தன்னைக் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைப் படுகொலை செய்த இளைஞர்’, `காதலிக்க மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய ஆண்' என்பதெல்லாம் சமீப வருடங்களாகக் கண்களுக்குப் பழகிப்போன செய்திகளாகிவிட்டன. இப்படித்தான் சமீபத்தில் நெல்லையிலும் ஒருதலைக் காதல் ஒன்று இளம்பெண் ஒருவரின் உயிரைப் பறித்துவிட்டது. இதுகுறித்து, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'ஒருதலைக் காதலால் நடைபெறுகிற கொலைகளைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்' என்று தமிழக அரசை வலியுறுத்தி இருந்தார். இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வரமுடியுமா என்று மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்தைக் கேட்டோம். 

ஒருதலைக் காதல் - கொலை

``அவருடைய ஆதங்கம் மிக மிக நியாயம். அப்படியொரு சட்டம் வந்தாலாவது இப்படிப்பட்ட கொலைகள் நடக்காமல் இருக்காதா என்ற நல்ல எண்ணத்தில் அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார். ஆனால், ஒருவர் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம், யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்யலாம். அது அவர்களுடைய அடிப்படை உரிமை. அதற்கு எதிராக யாரும் பேச முடியாது, பேசவும் கூடாது. காதல் என்பது ஓர் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ இயற்கையாக வரக்கூடிய ஓர் உணர்வு. அதைச் செயற்கையாக சட்டம் போட்டு தடுப்பதெல்லாம் செய்ய முடியாது, அப்படிச் செய்வதும் சரியல்ல. 

வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்அதற்காக ஆசிட் வீச்சையோ, அதனால் ஓர் உயிர் பறி போவதையோ நான் ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். பெண்களின் உயிர்களைக் குடிக்கிற அந்தக் கொடுமைகளை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்தக் கொலைகள் சட்டத்துக்குப் புறம்பானவை மட்டுமல்ல, மனிதநேயப்படி தாங்க இயலாத கொடுமையும்கூட. இதை மாற்ற வேண்டுமென்றால், பெண்ணை சக மனுஷியாக, தோழியாகப் பார்ப்பதற்கு ஆண்களுக்கு அவர்களின் பெற்றோரும் கல்விமுறையும் சுற்றுச் சூழல்களும் கற்றுத்தர வேண்டும். இப்படித்தான் ஆண்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமே அன்றி, ராமதாஸ் சொல்கிற சட்டத்தைப் போட்டெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. 

தவிர, அப்படி ஒருதலைக் காதலை தடுக்கிற சட்டத்தைப் போட்டால் அது நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகப் போய்விடும். அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் போய்விடும். அதற்குப் பதில் ஆண்களின் 'எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்கிற, பெண்களைப் பொருளாக பார்க்கிற எண்ணத்தை மாற்றுங்கள். வளர்ந்த ஆண்களிடம் இந்த எண்ணத்தை ஏற்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. அட்லீஸ்ட் அடுத்த தலைமுறை ஆண் குழந்தைகளையாவது பெண்ணைத் தோழியாகப் பார்க்கிற சமுதாயமாக வளர்க்கப் பார்ப்போம். அதுமட்டும்தான் இதற்குச் சரியான தீர்வு!''