`மூக்கறுபட்டதை அரசு நினைக்கணும்!' - பொன்.மாணிக்கவேலை வரவேற்கும் வைகோ | vaiko welcomes Madras hc's order over idol theft case

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:17:00 (30/11/2018)

`மூக்கறுபட்டதை அரசு நினைக்கணும்!' - பொன்.மாணிக்கவேலை வரவேற்கும் வைகோ

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவரான பொன்.மாணிக்கவேலுக்கு பணி நீட்டிப்பு செய்த சென்னை உயர் நீதிமன்ற ஆணையை வரவேற்றுள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, 'கடந்த முறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மூக்கறுபட்டதை நினைவில் வைத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்று எண்ணுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

பொன் மாணிக்கவேல்

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் தொன்மை, கலாசாரம், பண்பாட்டை உலகுக்குப் பறைசாற்றும் சிலைகள், தமிழகத்தின் ஆலயங்கள் எங்கும் உள்ளன. தமிழக சிலைகளுக்கு நிகரான எழிலும், நுட்ப வேலைப்பாடுகளும் கொண்ட சிலைகள் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. அதனால்தான் 1982-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள 9 ராமர் கோயில்களின் மூலஸ்தான சிலைகளை, அமெரிக்க நாட்டில் நடைபெற்ற இந்தியத் திருவிழாவுக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவெடுத்தபோது, அதை எதிர்த்துத் தடுத்து நிறுத்த நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் நான் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தேன். பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி உட்பட, அனைத்து கட்சித் தலைவர்களும் என் தீர்மானத்தை ஆதரித்துப் பேசினார்கள். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இருந்த மூத்த தலைவர் கமலபதி திரிபாதி, என் இருக்கைக்கே வந்து தோளைத் தட்டிக்கொடுத்து வெகுவாகப் பாராட்டினார். என்னுடைய முயற்சியால் அந்தச் சிலைகள் அமெரிக்காவுக்கு அனுப்புவது தடுத்து நிறுத்தப்பட்டன.

ஆலயங்களில் உள்ள சிலைகளை இறைவனின் வடிவமாகவே மக்கள் வழிபடுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களின் சிலைகள், கடந்த பல ஆண்டுகளில் திருடப்பட்டு, உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் விற்கப்பட்டுவந்தன. வெளிநாடுகளின் அருங்காட்சியகங்களுக்கும் போய்ச் சேர்ந்தன. 2012-ம் ஆண்டு, காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக நியமிக்கப்பட்டார். அவரது கடுமையான முயற்சியால், பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 1146 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. வைகோஆஸ்திரேலியா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட 17 சிலைகளை பன்னாட்டுக் காவல்துறை உதவியுடன் தமிழகத்துக்கு மீட்டுக் கொண்டுவந்துள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் 45 வழக்குகளைப் பதிவுசெய்து, 47 குற்றவாளிகளைப் பொன்.மாணிக்கவேல் கைது செய்துள்ளார். புகழ்பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில், 50 வருடங்களுக்கு முன்பு திருடப்பட்ட ராஜராஜ சோழன், செம்பியன்மாதேவி சிலைகளை மீட்டுக் கொண்டுவந்த பெருமை இவருக்கு உண்டு. கலைப் பொருள்களை விற்பனை செய்வதாகக் கூறி, சிலை கடத்தலில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளைக் கைதுசெய்தார். சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு தமிழக அரசு மாற்றியதைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு ரத்துசெய்து, பொன்.மாணிக்கவேலே சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுத் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார் என ஆணை பிறப்பித்தது. இந்த ஆணையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்ச நீதிமன்றம் அந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடிசெய்து உயர் நீதிமன்ற ஆணையை அங்கீகரித்தது.

இந்தச் சூழ்நிலையில், இன்று (30.11.2018) ஐஜி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெறுகிறார் என்பதால், நேற்று காவல் துறையினர் பிரிவு உபசார பாராட்டு விழா நடத்தினர். அதில், அனைவர் மனதையும் நெகிழச்செய்யும் வகையில் பொன்.மாணிக்கவேல் நன்றியுரை ஆற்றினார். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரியாகக் காவல்துறை அதிகாரி அபய்குமார் சிங்கை தமிழக அரசு நியமித்தது. திடுக்கிடும் திருப்பமாக, இன்ப அதிர்ச்சியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் மகாதேவன், நீதியரசர் ஆதிகேசவலு அமர்வு தமிழக அரசின் ஆணையை ரத்துசெய்து, பொன்.மாணிக்கவேலே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு ஆணை பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்க மகிழ்ச்சியூட்டும் நடவடிக்கையாகும். கடந்த முறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று மூக்கறுபட்டதை நினைவில் வைத்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது என்று எண்ணுகிறேன்" என்று கூறியுள்ளார்.