கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்பு! | sanjay kumar takes charge as site director of kknpp

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:21:00 (30/11/2018)

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்பு!

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அணுசக்தித் துறையில் 32 ஆண்டு காலம் அனுபவம்கொண்ட அவரை, அணுமின் நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.

கூடங்குளம் அணு உலை

கூடங்குளம் வளாக இயக்குநர் சஞ்சய் குமார்கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வளாக இயக்குநராக இருந்த சாகு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய வளாக இயக்குநராக சஞ்சய் குமாரை இந்திய அணு சக்திக் கழகம் நியமித்தது. அதைத் தொடர்ந்து, அவர் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கைகா அணுமின் நிலைய வளாக இயக்குநராகப் பணியாற்றிவந்த அவர், தற்போது கூடங்குளத்தில் வளாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.

பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடித்துள்ள அவர், பாபா அணு ஆராய்ச்சி மைய பயிற்சிப் பள்ளியில் 1985-ம் ஆண்டு சேர்ந்தார். சிறப்பான வகையில் அணு அறிவியலில் தேர்ச்சிபெற்ற அவர், உத்தரப்பிரதேசத்தில் உள்ள நரோரா அணுமின் நிலையத்தில் அணுப்பிளவு ஆபரேட்டராக முதன் முதலில் பணியைத் தொடங்கினார். அணு சக்தித் துறையில் அவரது சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, அணு விஞ்ஞானிகளுக்குத் தேவையான பல்வேறு அனுமதிச் சான்றுகளை அணுசக்திக் கழகத்திடம் இருந்து பெற்றார். 

கர்நாடக மாநிலத்தின் கைகா அணுமின் நிலையத்தில் 13 ஆண்டுகள் பணியாற்றிய சஞ்சய் குமார், ராஜஸ்தான் அணுமின் நிலையம் மற்றும் குஜராத் மாநிலத்தின் கக்ரபர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் பணியாற்றினார். 2012-ம் ஆண்டு மீண்டும்  கைகா அணுமின் நிலையத்துக்கு மாற்றப்பட்ட அவர், அங்குள்ள முதல் இரு அணு உலைகளுக்கான வளாக இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். கடந்த ஆண்டு, ஒட்டுமொத்த 4 அணுஉலைகளுக்குமான வளாக இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார். 

அணுமின் நிலையங்களில், கடந்த 32 வருடங்களாக பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள சஞ்சய் குமார், தற்போது கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநராகி இருக்கிறார். கூடங்குளத்தில், இரு அணுஉலைகள் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் செயல்பட்டுவருகின்றன. அந்த இரு அணுஉலைகளுமே தற்போது பழுது காரணமாக மின்சாரம் உற்பத்திசெய்வதை நிறுத்தி வைத்திருக்கின்றன. முதல் இரு உலைகளிலும் அடிக்கடி பழுது ஏற்பட்டுவருவது சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், 3 மற்றும் 4-வது உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. 5 மற்றும் 6-வது அணுஉலைகளுக்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்த நிலையில், ரகசியமாக பூமி பூஜையை சமீபத்தில் நடத்தி முடித்துள்ளனர். இத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில், வளாக இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார், சஞ்சய் குமார். அவர், கூடங்குளத்தில் நிலவும் சர்ச்சைகளைக் களைந்து வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.