வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:20 (30/11/2018)

`எங்களை கருணைக்கொலை செய்திடுங்கள்'- ஸ்டெர்லைட் எதிப்புக் கூட்டமைப்பினர் ஆவேசம்!

``தூத்துக்குடி மக்களின் நலனைவிட ஸ்டெர்லைட் நலன்தான் முக்கியம் என்றால், கருணைக்கொலை செய்திடுங்கள்'' என ஸ்டெர்லைட்டுக்கு  எதிரான கூட்டமைப்பைச்  சேர்ந்த பெண்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.

ஸ்டெர்லைட்டு எதிரான கூட்டமைப்பினர்

மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "கடந்த மே 22 அன்று 14 உயிர்களை இழந்ததற்குப் பின், தமிழக மக்களின் கடும் எதிர்ப்பின் பேரில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஸ்டெர்லைட்டை மூட, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மோசடியானது. நீதிமன்றத்தில் ரத்தாக வாய்ப்புள்ளது. நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சட்ட வல்லுநர்கள் அரசாணை செல்லாது என்றனர். ஆனால், உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், "கொள்கை முடிவெடுத்துத்தான் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணை சட்டப்படி வலிமையானது" என நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.

முதல்வர் உள்ளிட்ட அ.தி.மு.க அமைச்சர்கள், உச்ச நீதிமன்றம்  அல்ல உலக நீதிமன்றம் சென்றாலும் ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்றனர். ஆனால் இன்று, நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு, "தமிழக அரசின் அரசாணை இயற்கை நீதிக்கு எதிரானது,  சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல என்று அறிக்கை தாக்கல்செய்துள்ளனர். ஆக, ஸ்டெர்லைட்டை திறக்கலாம் எனப் பரிந்துரைத்துள்ளனர். இதற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் சொல்லப்போகிறார். தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட ஆய்வுக்குழு அறிக்கையை வெளியிட மறுப்பது ஏன். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும் விசயத்தில் தமிழக அரசு மீது சந்தேகம் ஏற்படுகிறது. உண்மையாக ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று நினைத்தால், அதற்கான சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'' என கேட்டுக்கொண்டார்.

``தூத்துக்குடி மக்களின் நலனைவிட ஸ்டெர்லைட் நலன்தான் முக்கியம் என்றால், எங்களை கருணைக்கொலை செய்திடுங்கள்'' என ஸ்டெர்லைட்டுக்கு  எதிரான கூட்டமைப்பைச் சேர்ந்த பெண்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.