வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:18:00 (30/11/2018)

"ஆணவக்கொலைக்கு எதிர்க்குரல் கொடுக்க வாருங்கள்!"- கெளசல்யா சங்கர்

சாதி ஒழிப்புப் போராளியாக வலம் வந்து கொண்டிருக்கிற கெளசல்யா சங்கர், தன்னுடைய கணவர் சங்கரின் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவியிருக்கிறார். அந்த அறக்கட்டளையின் சார்பாக, வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் போஸ்கோ இளைஞர் மன்றத்தில் 'நத்தீஸ் - சுவாதி'க்கு அஞ்சலியும், ஆணவக் கொலைக்கு எதிர்க்குரல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. சாதி ஒழிப்புக்காகக் குரல்கொடுத்து வருபவர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். இதுகுறித்து கெளசல்யா சங்கரிடம் பேசினோம்.

"சாதி விட்டு சாதி காதலித்தவள், அவனையே மணம் முடித்துவிடக் கூடாது என்பதற்காகத் தந்தையே பெற்ற மகளைப் படுகொலை செய்வதைத்தான் ஆணவக் கொலை என்கிறோம். இது, சாதியம் தோற்றுவித்திருக்கிற தனிக் குற்ற வகை. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுவிட்டன. இந்த ஆணவக் கொலையைத் தடுக்க வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும்.

கெளசல்யா சங்கர்

முதலில் இப்படி ஒரு குற்ற வகை உள்ளது என்பதை அரசு ஏற்கச் செய்ய வேண்டும். இதுவரை தமிழக அரசு இப்படி ஒன்று இருப்பதையே ஒப்புக்கொள்ளவில்லை. நந்தீஸ் – சுவாதியின் உடல் வெப்பம் கூடவா அரசுக்கு இன்னமும் உணர்த்தவில்லை. ஆணவக் கொலை என்பதை ஒப்புக்கொள்ளச் செய்யவே இன்னொரு பிணம் தேவையா. அப்போதாவது ஒப்புக்கொள்வார்களா தெரியவில்லை. ஆனால், மனிதநேயத்தின்மீது நம்பிக்கை உள்ள, சமத்துவத்தில் நாட்டம் உள்ள, அன்பு எனும் கொடி ஏந்தியுள்ள நாம், ஆணவக் கொலைகளைத் தடுக்க இயன்ற அனைத்தும் செய்ய வேண்டும். சாதி ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் வேண்டும் எனக் கோருகிறோம். சாதி ஒழிப்புதான் இறுதியிலும் இறுதியாக அனைத்துக்கும் தீர்வு என்றாலும், அதுவரைக்கும் ஆணவக் கொலைகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

ஆணவக் கொலை என்பதை அரசு ஏற்கச் செய்யவும், அதற்கு எதிரான தனிச்சட்டம் படைக்கவும் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும். அதன் முதல் தொடக்கமாக நந்தீஸ் - சுவாதி இருவருக்கும் அஞ்சலிசெலுத்த அழைக்கிறோம். அவர்கள் வேறு யாரோ அல்ல. நம் பிள்ளைகள், நம் அண்ணன், நம் தங்கை என்ற உணர்வு நமக்கு வேண்டும். நம் வீட்டில் இருவரை இழந்திருக்கிறோம். அந்த உணர்வோடு குடும்பத்துடன் வாருங்கள் அஞ்சலிசெலுத்துவோம். ஆணவக் கொலைக்கு எதிர்க்குரல் கொடுப்போம்.  இந்த நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன், இயக்குநர் கோபி நயினார், திருமுருகன் காந்தி போன்றோர் கலந்துகொள்கிறார்கள்.

அன்பும் மனிதநேயமுமே பெரிது என்பதை சாதிவெறிக் கூட்டத்துக்குச் சொல்லவும், சாதி ஆணவக் கொலைக்கு எதிராக தமிழகமே உள்ளது என்பதை அரசுக்குப் பறைசாற்றவும், அனைவரும் குடும்பம் குடும்பமாகத் திரண்டு வர உரிமையுடன் அழைக்கிறோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க