வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:40 (30/11/2018)

குரங்கணி மலையில் இனி ட்ரெக்கிங் செல்லலாம்! - வனத்துறை அனுமதி

குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் சென்று,  காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, குரங்கணி மலைப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், எட்டு மாதங்களுக்குப் பிறகு தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும், கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டு, ட்ரெக்கிங் செல்ல இன்று முதல் அனுமதிக்கப்படுவதாகவும் மாவட்ட வன அலுவலர் கெளதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், "அங்கீகரிக்கப்பட்ட மலை ஏற்றம் செய்யக்கூடிய பகுதியான குரங்கணி முதல் டாப்ஸ்டேஷன் வழி சென்ட்ரல் ஸ்டேஷன் 11 கி.மீ தொலைவுள்ள இப்பாதையில் மட்டுமே தற்போது மலை ஏற்றத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறுவதற்கு மாவட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்து, மாவட்ட வன அலுவலர் அனுமதி பெற வேண்டும். மலை ஏற்றத்திற்குச் செல்பவர்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதி இல்லை. மலை ஏற்றம் செல்பவர்களுடன் வனத்துறையைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவர் அனுப்பிவைக்கப்படுவார். ஒரு நபருக்கு 350 ரூபாய் கட்டணமும், வெளிநாட்டைச் சேர்ந்தவருக்கு 3000 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தீப்பெட்டி, மதுபானங்கள், பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி இல்லை. வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா வைக்கவும், தொலைத்தொடர்பு சேவைக்காக வயர்லெஸ் வசதிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனுமதி இல்லாமல் தடைசெய்யப்பட்ட பகுதிகளில்  செல்பவர்கள்மீது வழக்குப் பதித்து கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தனியார் ட்ரெக்கிங் கிளப், முறையாக  வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுவர். மலை ஏற்றம் செல்வதற்கு முன்பு, ஆபத்து நேரத்தில் எவ்வாறு தப்பிப்பது என்பதுகுறித்து அறிவுறுத்தப்படும். அது தொடர்பான ஓர் விழிப்புஉணர்வு குறும்படம் திரையிட்டுக் காண்பிக்கப்படும். குரங்கணி மலை ஏற்றத்திற்கு என வனத்துறை சார்பாகத் தனியே ஓர் இணையதளச் சேவை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அவசர அனுமதிக்காக என்னுடைய மின்னஞ்சல் (dfo_theni@yahoo.co.in) முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்" என்றார்.

காட்டுத்தீயில் சிக்கி 23 பேர் பலியான குரங்கணி முதல் கொழுக்குமலை ட்ரெக்கிங் பாதை குறித்து அவரிடம் நாம் கேள்வி எழுப்பியபோது, "குரங்கணி முதல் கொழுக்குமலை செல்லும் பாதையில் எப்போதும் அனுமதி இல்லை. அது, ட்ரெக்கிங் பாதையும் இல்லை. குரங்கணி பகுதி மக்கள் கொழுக்குமலை சென்று தேயிலை எஸ்டேட்களில் வேலைசெய்துவிட்டுத் திரும்ப அந்தப் பாதையைப் பல வருடங்களாகப் பயன்படுத்திவருகிறார்கள். அவர்களுக்கு மட்டுமே அனுமதி. வேறு நபர்கள் அவ்வழியைப் பயன்படுத்தினால், வழக்குப்பதிவு செய்து உடனே கைதும் செய்யப்படுவார்கள்" என்றார்.

குரங்கணியில் இருந்து டாப்ஸ்டேஷன் வழி சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் பாதுகாப்பான மலைப்பாதை, குரங்கணி தீ விபத்து சம்பவத்தால் தடை செய்யப்பட்டது. தற்போது, அவ்வழியில் செல்ல மட்டுமே வனத்துறை அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.