வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:00 (30/11/2018)

குரங்குகளுக்கு தினமும் உணவு... அசத்தும் முன்னாள் பெண் டி.எஸ்.பி!

குரங்குகளுக்கு தினமும் உணவு... அசத்தும் முன்னாள் பெண் டி.எஸ்.பி!

`அடேய் ரெட்ட சுழி.  உனக்கு ரெட்டை வாழைப்பழம். நீ யாருடா கோமாளி. அவனை அடிச்சுப் புடுங்க வர்ற... எல்லாத்துக்கும் தருவேன்ல’ - செல்லமாகக் கோவிக்கிறார் மாலதி. வாழைப் பழங்களை முழுதாகத் தின்று முடிப்பதற்குள் அவசரஅவசரமாக கடலைகளைக் கொரிக்க ஆரம்பித்தன குரங்குகள். சாப்பிடப் பழங்கள், குடிக்கப் பால் இருந்தபோதும் அடுத்தவரின் பங்குகளை பிடிங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன குட்டிக் குரங்குகள். ஒரு வழியாக, சரவணப் பொய்கையில் ஆரம்பித்து, கடைசியாக சஷ்டி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார் அவர். ஆம், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே சுற்றித்திரியும் வானரங்களுக்கு அட்சயபாத்திரமாக விளங்குகிறார் முன்னாள் டி.எஸ்.பி மாலதி. கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் குரங்குகளுக்கு உணவளிக்கும் மாலதியிடம் பேச்சுக்கொடுத்தோம். 

சொந்த ஊர் திருச்சிப் பக்கதில் இருக்கும் மண்ணச்சநல்லூர் கிராமம். உடற்கல்வி ஆசிரியருக்குப் படித்தேன். காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பேராசிரியராகவும், கொடைக்கானலில் உள்ள கல்லூரியிலும் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில், உடற்கல்வி துறையிலிருந்து காவல்துறைக்குச் செல்ல வேண்டும் என முயற்சி செய்தேன். 1978-ல் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராகச் சேர்ந்தேன். பழனி, விருதுநகர், சிவகாசி, உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி 1993-ல் ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றேன். அதற்குப் பிறகு டி.எஸ்.பி-யாக உயர் பதவி வகித்து, 2010-ல் ஓய்வு பெற்றேன். 

ஒரு வழக்கு விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது திருப்பரங்குன்றம் பகுதியில் நான்கைந்து குரங்குகள் பசியில் வாடியபடி அமர்ந்திருந்தன. உடல் மெலிந்து சோகமாக அமர்ந்திருந்தன. சேட்டைக்குப் பேர் போன குரங்குகள் சோர்ந்திருந்த காட்சி என் மனதை உருக்கியது. உடனே 2 சீப் வாழைப்பழங்களை வாங்கி குரங்களிடம் கொடுத்தேன். கொண்டாட்டமாகப் பழங்களைச் சாப்பிட்டது. அன்று முதல் குரங்குகள் மீது எனக்கு அதிகப் பாசம் வர ஆரம்பித்தது.

குரங்குகளுக்கு உணவு அளிக்கும் டி.எஸ்.பி

திடீரென எனக்கு ஒரு எண்ணம். `நாம் ஏன் தினமும் இந்தக் குரங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது?’ என்று எண்ணி, 2015-ல் இருந்து இங்குள்ள குரங்குகளுக்கு உணவு வழங்க ஆரம்பித்தேன். இன்றுவரை தொடர்கிறது. 

மதுரை டி.வி.எஸ் நகரில் வசித்துவருகிறேன். என் கணவர் எஸ்.பி-யாக இருந்து ஓய்வு பெற்றவர் மகள் கல்லூரிப் பேராசிரியை. மகன் பி.இ முடித்துவிட்டு கிரிக்கெட் பிளேயராக உள்ளார். என் குடும்பத்தினர் யாரும் என் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை. தினமும் வாழைப்பழம், வேர்க்கடலை, பலாப்பழம், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் எனப் பழங்களை வாங்கி, ஆட்டோவில் ஏற்றி, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள 6 இடங்களுக்கும் சென்று பழத்தைக் கொடுப்பேன். மாலை 3:45-க்கு சரவணப்பொய்கையில் ஆரம்பிப்பேன். சிவன் கோயில், கல்வெட்டு குகை, மயில் தோப்பு, கோட்டை தெரு, சஷ்டி மண்டம் வரை வந்து முடித்துவிடுவேன். அப்போது போன் கூட பயன்படுத்த மாட்டேன். எனக்குப் பிடித்த குரங்குகளிடம் பேசிக்கொண்டே, அதற்குப் பிடித்தமான உணவை வழங்குவேன்.

குரங்குகளுக்கு உணவு அளிக்கும் டி.எஸ்.பி

எனக்குப் பிடித்த நபர்களின் பெயர்களைச் சொல்லித்தான் இவர்களை அழைப்பேன். சேட்டை செய்தால் உரிமையாகத் திட்டுவேன். இப்படி நெருக்கமாக இருக்கும் குரங்குகளில் ஒன்றான ஃபேட்சோவை தீபாவளிக்கு முந்தைய நாள் காணவில்லை. வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதைப் புதைத்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுவந்தேன். அன்று தீபாவளியைக் கூட புறக்கணித்தேன். 

தீபாவளி முடிந்து மறுநாள் எப்போதும் போல செல்லும்போது ஃபேட்சோ மரத்திலிருந்து துள்ளிக் குதித்து ஓடிவந்தது. அப்போதுதான் தெரிந்தது இறந்தது ஃபேட்சோ இல்லை என்று. அதைப் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என் அன்பில் பல குரங்குகள் வளர்ந்து வருகின்றன. இதை பெருமைக்காகச் சொல்லவில்லை. குரங்களைப் பற்றிய புரிதல் ஏற்பட்டு, அவற்றைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும். இங்கேயே பசியாறிவிட்டால், குரங்குகள் குடியிருப்புகளில் தொந்தரவு செய்யாது” என்றார்.

`அழகர்கோயில், திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள குரங்குகள், பக்தர்கள் கொடுக்கும் உணவுகளில்தான் உயிர் வாழ்கின்றன. உணவு கிடைக்காதபோது, குடியிருப்புகளுக்குள் புகுந்து சேட்டை செய்கின்றன. கோயில் வருமானத்தில் கிடைக்கும் பணத்தில் சொற்ப அளவில் பழங்கள் வாங்கினாலே போதும், குரங்குகள் பிழைக்கும். பக்தர்களும் தேங்காய், பழத்தை குரங்குகளுக்குக் கொடுக்கலாம். சமூக விரோதிகள் குரங்குகளைத் துன்புறுத்துவதையும் தடுக்க வேண்டும்’ என்பது அந்தப் பகுதி சமூக ஆர்வலர்களின் விருப்பம்.


டிரெண்டிங் @ விகடன்