வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (30/11/2018)

கடைசி தொடர்பு:18:29 (30/11/2018)

`இனி விஸ்வரூபம் எடுப்பார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்!’ - வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்

``இனி நீதிமன்றத்துக்கு மட்டும் பதில் சொன்னால் போதும், மூத்த அதிகாரிகள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. அவரின் முதல் இன்னிங்ஸைவிட இரண்டாம் இன்னிங்ஸ் இன்னும் வேகமாக இருக்கும். ஆறு மாதத்துக்குள் அனைத்து வழக்குகளையும் முடித்து விடுவார்'' இன்றைய நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு உற்சாகமாகப் பேசுகிறார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்.

பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தொடர்பாகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். இவர் தலைமையிலான குழு இதுவரை சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டிருக்கிறது. பல சிலைத்திருட்டுகளையும் தடுத்திருக்கிறது. சிலைக் கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. ஆனால், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்ததில் திருப்தி இல்லையெனக் கூறி சிலைக்கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ-க்கு மாற்றியது தமிழக அரசு.

அரசின் இந்த அரசாணைக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், சிலைக்கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, நீதிபதிகள் மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும், இன்றுடன் பதவி ஓய்வு பெற இருந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக அடுத்த ஒரு வருடத்துக்குப் பதவியில் இருப்பார் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன்இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரனிடம் பேசினோம்.

``சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வந்தார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். அதன் காரணமாகப் பல முக்கியப் புள்ளிகள் சிக்கிக்கொண்டனர். மேலும், பல அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வந்தனர். அந்த நிலையில்தான் அவருடைய விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. அதை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வந்துள்ளது.

சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை உருவாக்கி, அதற்கு ஐ.ஜி பொன்.மாணிக்கவேலை தலைவராக நியமித்திருக்கிறார்கள். இந்தக் குழு உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும். இனி, காவல் துறை உயரதிகாரிகளுக்கோ, உள்துறை அதிகாரிகளுக்கோ அவர் பதில் சொல்லத் தேவையில்லை. நீதிமன்றத்துக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். இனி அவருக்கு எந்த இடையூறும் இருக்காது. அரசு, அவருக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தே ஆக வேண்டும். ஆறு மாதத்துக்குள் அனைத்து வழக்குகளையும் முடித்துவிடுவார் பாருங்கள்’’ என்றார் அவர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க