வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (01/12/2018)

கடைசி தொடர்பு:17:22 (01/12/2018)

`அபிமன்யு' டைட்டிலில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்-5

எங்கள் ஊர் `பேபி டாக்கீஸில்' ராஜகுமாரி படம் வெளியிடப்பட்டது. முதல்நாள், முதல் காட்சி. நான் அரங்கத்தினுள் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பமானது. `உதவி ஆசிரியர் மு.கருணாநிதி' என்று தனியாகப் பெயர் வரிசையில் (Main Titles) காண்பிக்கப்பட்டது.

`அபிமன்யு' டைட்டிலில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன்? `பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்-5

``வெகுதொலைவில் தனது காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு, வெறுங்காலுடன் நடந்து வாரியாரின் சிலை அருகில் சென்று, அதைப் பக்தி சிரத்தையுடன் உணர்வுபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றினார், கலைஞர் (கருணாநிதி) எனக் கடந்த தொடரில் படித்தோமல்லவா? இந்தத் தொடரில் `அபிமன்யு' டைட்டிலில் கருணாநிதி பெயர் இடம்பெறாதது ஏன்" என்பது குறித்து பார்ப்போம்....  

நான் முதன்முதலாக எழுதிய நாடகத்தின் பெயர், `அமாவாசை அல்லது நள்ளிரவு நண்பர்கள்'. பிற்காலத்தில் ஒருவன் கள்வனாகவும், இன்னொருவன் காவல்துறை அதிகாரியாகவும் விளங்கி, விரோதிகளான இரு இளைஞர்களைப் பற்றிய கதை அது. 

அன்றைக்கு நடிப்பிலும், வசனம் பேசுவதிலும் தலைசிறந்து விளங்கிய `தவ நடிக பூபதி' என்னும் விருது பெற்ற பி.யு.சின்னப்பாவின் மீது நான் கொண்டிருந்த அபிமானத்தின் காரணமாக `சின்னப்பா செந்தமிழ் நாடக மன்றம்' என்னும் பெயரில் என் இளைய நண்பர்களை வைத்துக்கொண்டு ஒருகுழு அமைத்து, நானே சொந்தமாக நாடகங்களை அரங்கேற்றினேன்.

என் இரண்டாவது நாடகம் `ஜென்ம தண்டனை'; மூன்றாவது `திரிசூலம்' - மூன்று நண்பர்களைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை. ஆக, `எழுத்தாளன்' என்ற நிலையிலிருந்து முன்னேறி, நாளடைவில் `நாடக ஆசிரியர்' ஆகி, ஊருக்கு நன்கு அறிமுகம் ஆகிவிட்டேன்.

இரவு வேளைகளில், நண்பர்களை அழைத்துக்கொண்டு திருக்குளத்தைச் சுற்றிலும் உள்ள மண்டபங்களின் மீது ஏறிநின்று, சுண்ணாம்புக் கலவையில் தேங்காய் மட்டையிலான பிரஷை நனைத்து, நாடகத்தின் பெயரைப் பெரிதாக எழுதி, கதை-வசனம் `ஜேசு' (ஜேசுதாஸ் என்ற எனது இயற்பெயரின் சுருக்கம்) என்று குறிப்பிடுவேன்.

கலைஞரின் (கருணாநிதி) மூத்த அக்காளின் பிள்ளையும், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான அமிர்தம், இன்றைக்கும் என்னைச் சந்திக்கும்போது, ``நீங்களே நாடகம் எழுதிக்குவீங்க; நீங்களே மண்டபத்துல ஏறி நின்னு சுண்ணாம்பாலே உங்க பேரை விளம்பரம் பண்ணிக்குவீங்க" என்று சொல்லி, என்னைக் கேலி செய்வார்.

'பராசக்தி' கருணாநிதி - ஆரூர்தாஸ் நினைவலைகள்

இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்...

இடைக்காலத்தில் கலைஞர் ஈரோட்டுக்குச் சென்று பெரியாரின் `விடுதலை' மற்றும் `குடியரசு' இதழ்களில் துணை ஆசிரியராக இருந்து எழுதி, பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூர் சென்று `சென்ட்ரல் ஸ்டுடியோ'வின் ஆஸ்தான ஆசிரியரும் இயக்குநராகவும் அன்றைக்குப் பெரும் புகழ்பெற்று விளங்கிய ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராகப் பணிபுரிந்து, முதன்முதலாக ஜூபிடர் பிக்சர்ஸின் `ராஜகுமாரி' படத்துக்கு வசனம் எழுதினார். இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி - நடிகர் எம்.ஜி.ஆர். - வசனகர்த்தா மு.கருணாநிதி ஆகிய மூவருக்குமே முதல் அறிமுகப்படமாக `ராஜகுமாரி' அமைந்து, பெரும் வெற்றி பெற்றது.

1947 ஆகஸ்ட் மாதம்!

எங்கள் ஊர் `பேபி டாக்கீஸில்' ராஜகுமாரி படம் வெளியிடப்பட்டது. முதல்நாள், முதல் காட்சி. நான் அரங்கத்தினுள் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பமானது. `உதவி ஆசிரியர் மு.கருணாநிதி' என்று தனியாகப் பெயர் வரிசையில் (Main Titles) காண்பிக்கப்பட்டது. உற்சாக மிகுதியால் நான் முதலில் கைதட்டினேன். ஊர்க்காரர் என்பதால் எல்லோரும் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள். அடுத்த சில ஆண்டுகளில், இதே அரங்கின் திரையில் கதை, வசனம் - ஆரூர்தாஸ் என்று என் பெயர் காண்பிக்கப்பட்டு, நானும் கைதட்டல் பெறுவேன் என்று அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு 1948-ல் `அபிமன்யு' வெளிவந்தது. `ராஜகுமாரி' படத்தின் அதே இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியின் குழு இதிலும் பணிபுரிந்திருந்தது. அப்போது கலைஞர் ஊரில் இருந்தார். தன்னுடைய நண்பர்களுடன் படம் பார்க்கத் தியேட்டருக்குச் சென்றார். `அபிமன்யு' படத்தின் முழு வசனங்களையும் அவர் எழுதியிருந்தும்கூட, அவர் பெயர் படத்தில் இடம் பெறாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதனால் மீண்டும் கோவை செல்லாமல் ஊரிலேயே தங்கிவிட்டார்.

கருணாநிதி

பின்னாளில் கதை-வசனகர்த்தாவாக கலைஞர் பெரும் புகழ்பெற்றிருந்தபோது, அதே ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்து, அதே ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கி, அதே எம்.ஜி.ஆர். நடித்த `அரசிளங்குமரி' மற்றும் சிவாஜிகணேசன் நடித்து மகத்தான வெற்றி பெற்ற `மனோகரா', ஜெமினிகணேசன் நடித்த `எல்லாரும் இந்நாட்டு மன்னர்' ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. `ராஜகுமாரி’யைக் காட்டிலும் `அபிமன்யு’ படத்தில் கலைஞரின் வசனங்கள் என்னை மிகவும் ஈர்த்தன.

குருக்ஷேத்திரப் போர்க்களக் காட்சி... நிராயுதபாணியாக நிற்கும் இளைஞன் அபிமன்யு (எஸ்.எம்.குமரேசன்), சகுனியிடம் (எஸ்.வி. சுப்பையா) கேட்கிறான்: ``தாத்தா! உடைந்த வாளாயிருந்தாலும் ஒரு வாள் கொடுங்கள். இந்த உத்தமர்களை உருத்தெரியாமல் ஆக்குகிறேன்.” 

அதற்கு சகுனி பதில் கூறுகிறார்: ``தம்பி, இது போர்க்களம். நீதிமன்றம் அல்ல!”

சக்ர வியூகத்தை அபிமன்யு அழித்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்று, துரோணாச்சாரியின் மீது ஆத்திரங்கொண்ட சகுனி கூறுகிறான்...``யாராலும் அசைக்க முடியாத சக்ர வியூகத்தை அபிமன்யு அழித்துவிட்டான் என்றால், அங்குதான் இருக்கிறது, ஆச்சார்யாரின் விபீஷண வேலை”.

இந்த வசனம் அன்றைக்கு அரங்கத்துக்குள் இருந்த பார்வையாளர்களின் பலத்த கைதட்டலைப் பெற்றது. அதற்குக் காரணம், அந்நாள்களில் சக்ரவர்த்தி சி.ராஜகோபாலாச்சாரியார் என்ற ராஜாஜியை அண்ணாவும், ஏனைய இயக்கத் தோழர்களும் ‘ஆச்சார்யார்’ என்றே அழைத்தனர்; எழுதினர்.

நினைவலைகள் தொடரும்...


டிரெண்டிங் @ விகடன்