வெளியிடப்பட்ட நேரம்: 18:51 (30/11/2018)

கடைசி தொடர்பு:19:25 (30/11/2018)

`அமைச்சரின் ஊழல் பற்றிப் பேசினோம்; தனிப்படை தேடுது!' - மீனவர் குற்றச்சாட்டு!

`தன்னுடய ஆட்களை வைத்துக்கொண்டு சட்டவிரோதமாக மணல் அள்ளினார் அமைச்சர் மணிகண்டன்; இதை எதிர்த்தோம்; வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடுகின்றனர் என்று குற்றம்சாட்டுகிறார்' பாரம்பர்ய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி.

மணிகண்டன்


இது தொடர்பாக அவரிடம் பேசினோம், ``ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் முறையற்ற முறையில் ஆட்களை நியமித்து அமைச்சர் மணிகண்டன் சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தார். அதேபோல அங்கிருந்த நீரையும் எடுத்துக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றம் சென்று தண்ணீர் மற்றும் மணல் அள்ளுவதை பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, தடுத்து நிறுத்தினோம். இதனிடையே பாம்பன் குந்துகால் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைத்தார்கள். கடற்கரை அருகிலுள்ள மணல் குன்றுகளில் உள்ள மணலை அள்ளிச் சென்றனர். ஒருநாளைக்கு 200 டிராக்டர் அளவு எடுத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் போராட்டத்தில் இறங்கினோம். கடற்கரை ஓரத்தில் உள்ள மணல் குன்றுகள் இயற்கை அரண். அதை அழித்துவிட்டால், கடல் நேரடியாகத் தீவை தாக்கும் அபாயம் உள்ளது. இதை எடுக்கக் கூடாது என எதிர்த்தோம்.

சின்னதம்பிஅரசே மணல் அள்ள தடைவிதித்திருக்கிறது. ஆனால், அமைச்சர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதைச் செய்தார். இதுகுறித்து புகார் அளித்த பின், கனிமவள அதிகாரி லலிதா டிராக்டர்களைப் பறிமுதல் செய்தார். ஆனால், அவர்களையும் மிரட்டி தப்பிவிட்டனர். இதனால் அதிகாரியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளையும் அழைத்து ஆர்பாட்டம் நடத்தினோம். அப்போது அமைச்சரின் ஊழல்களை வெளிப்படுத்தினோம். இது நடந்து 4 நாள்களுக்குப் பிறகு, ஊருக்குள் வந்த அமைச்சர், மீனவ சமூகத்தை கொச்சையாகத் திட்டியுள்ளார். `மீனவர்கள் அநாதைகள்' எனத் திட்டியுள்ளார். 70 சதவிகிதம் பேர் மீனவர்கள் வாழும் பகுதி அது. அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டேன்.

அமைச்சர் தன் ஆட்களை வைத்துக்கொண்டு என்னை மிரட்ட ஆரம்பித்தார். இதுமட்டுமல்லாமல், பாம்பனில் நடந்த ஆட்டோ ஸ்டேண்ட் திறப்பு விழா நிகழ்ச்சிக்குச் சென்றிருக்கிறார் அமைச்சர் மணிகண்டன். அப்போது, 'வானத்தில் இருந்தா மணல் கொட்டுகிறது. மணல் எடுத்தால் யாருக்கு என்ன பிரச்னை? இதற்குக் காரணமானவர்களை அவ்வளவு எளிதில் விட மாட்டேன்' எனக் கொதிப்போடு கூறியுள்ளார்.

கடலோடிகளின் பாதுகாவலராகக் கருதி அந்தோணியாரை கடவுளாக வணங்கி வருகிறோம். ஆனால், அதை  அவமதிக்கும் விதமாக பாம்பன் ஆட்டோஸ்டேண்டில் மீனவரின் பாதுகாவலரே எனக் கூறி அமைச்சர் சார்பில் கட்அவுட் வைக்கப்பட்டது. கிறிஸ்துவ மத சார்ந்திருக்கும் எங்களை வேண்டுமென்றே அவமதித்தார். மேற்கண்ட இரு சம்பவங்களுக்கும் நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இந்தத் தகவல்கள் பரவவே, பொறுத்துக்கொள்ள முடியாத அமைச்சர் மணிகன்டன் என்மீது வழக்கு தொடர்ந்தார். அது மட்டுமல்லாமல் தனிப்படை அமைத்து என்னை தேடிவருகிறார். நான் செல்லும் இடங்களை, எனக்கு தொடர்புடைய இடங்களில் காவல்துறை தேடிவருகிறது. அமைச்சரின் தவற்றை சுட்டிக்காட்டிய எனக்கு இந்த நிலைமையா?'’ என்று கலங்கினார்.