வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (30/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (30/11/2018)

சிறுசேமிப்புத் தொகையிலிருந்து கஜா புயல் நிவாரணம் அளித்த அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள்!

கஜா புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து முகாம்களில் வசித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மின் கம்பங்கள், மரங்கள் விழுந்துவிட்டதால் பல கிராமங்களின் மக்கள் மின்சாரம், குடிநீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்.

 கஜா புயல் நிவாரண உதவி

பேரழிவைச் சந்தித்துள்ள இந்த மக்களுக்குத் தமிழகம் முழுவதும் இருந்து பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் எனப் பலரும் நிவாரணப் பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றியப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் சிறுசேமிப்பில் இருந்து நிவாரணப் பொருள்களை வாங்கி அனுப்பியுள்ளனர். குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் அப்பள்ளி ஆசிரியர்களும் சேர்ந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள நோட்டு, பேனா, அரிசி, மெழுகுவத்தி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வாங்கி அனுப்பியுள்ளனர்.

 கஜா

இதில் மாணவ, மாணவிகள் தங்கள் சிறு சேமிப்பில் வைத்திருந்த தொகையில் பெற்றோர்கள் ஒப்புதலுடன் நிவாரணப் பொருள்களை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிவாரணப் பொருள்களை குமராட்சி ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயக்குமார், ஜான்சன், தமிழ்மணி ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலமுருகன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.