வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:20:40 (30/11/2018)

`எங்கள் குழந்தைகளுக்கு இன்னொரு அம்மா அவர்' - ஆசிரியைக்கு தங்க மோதிரம் அணிவித்த ஊர் மக்கள்!

ஒரே பள்ளியில் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஆசிரியைக்குக் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொன்னும், பொருளும் பரிசாக வழங்கிச் சிறப்பான வகையில் விழா எடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. 

அங்கன்வாடி ஆசிரியைக்கு பாராட்டு

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கிராமம், பாப்பாங்குளம். விவசாயத் தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கும் அந்தக் கிராமத்தில் அங்கன்வாடிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அதில் அமுதவள்ளி என்ற ஆசிரியை பணியாற்றினார். கடந்த 35 ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றிய அவர், இன்று ஓய்வு பெற்றார். அவருக்கு பாப்பாங்குளம் கிராமத்தினரும் அவரிடம் படித்த பழைய மாணவர்களும் சேர்ந்து பிரிவு உபச்சார விழா கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். விழாவின்போது கிராம மக்கள் பலரும் ஆசிரியை அமுதவள்ளிக்கு தங்க மோதிரம் அணிவித்தும் பரிசுப் பொருள்களை வழங்கியும் தங்களின் நன்றியை வெளிப்படுத்தினார்கள். 

இது பற்றி அந்தக் கிராமத்தினர் கூறுகையில், ``எங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பிய காலத்தில், அவர்களைத் தாய்மையுடன் அரவணைத்து கல்வி பயிற்றுவித்தார். அவருக்கு ஆசிரியர் பணி உயர்வு கிடைத்தபோதிலும், வேறு பள்ளிக்குச் செல்லாமல் எங்கள் கிராமத்திலேயே பணியாற்றினார். பிறருக்கு உதவும் ஏணி அதே இடத்தில் இருப்பதுபோல, அவர் இந்தப் பள்ளியிலேயே இருந்தாலும், அவரிடம் படித்த மாணவர்கள் உலகின் பல பகுதிகளிலும் உயர்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். 

அவர் எங்கள் குழந்தைகளை அரணைத்து பாதுகாத்துப் பயிற்றுவித்தார். மதிய உணவு இடைவேளை சமயத்தில் அவரும் மாணவர்களுடனேயே அமர்ந்து சாப்பிடுவார். தான் கொண்டுவரும் உணவைக் குழந்தைகளுக்குக் கொடுப்பார். அதனால் கிராமத்தினர் அனைவரும் அவருக்கு நன்றிக்கடனாக விழா எடுக்க முடிவு செய்தோம். அவர் மறுத்தபோதிலும் நாங்கள் கட்டாயப்படுத்தி விழா கொண்டாடினோம். அதில் கிராமத்தினர் அனைவரும் கலந்து கொண்டது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில்கூட, அவர் எங்கள் கிராமத்தினர் அனைவருக்கும் உணவு கொடுத்து நெகிழ வைத்துவிட்டார்’’ என்றார்கள். 

பணி ஓய்வு பெறுபவருக்கு பிரியாவிடை கொடுப்பது வழக்கமானதுதான். அவருடன் பணியாற்றும் சக பணியாளர்கள்தான் இந்த விழாவை நடத்துவார்கள். ஆனால், பாப்பாங்குளம் கிராமத்தில் ஒட்டுமொத்த கிராம மக்களும் திரண்டு வந்து அங்கன்வாடி ஆசிரியைக்குக் பாராட்டு விழா நடத்தி இருப்பது புதுமையானதாகப் பார்க்கப்படுகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட அங்கன்வாடி ஆசிரியைக்கு பணி ஓய்வு நாளில் கிடைத்த அங்கீகாரம் நெகிழவைப்பதாக இருந்தது.