`சோறா கேட்டோம்; அடிப்படை வசதிதானே கேட்டோம்' - நிர்மலா சீதாராமனை முற்றுகையிட்ட மக்கள்! | People Blocked road when nirmala sitharaman on way

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:22:00 (30/11/2018)

`சோறா கேட்டோம்; அடிப்படை வசதிதானே கேட்டோம்' - நிர்மலா சீதாராமனை முற்றுகையிட்ட மக்கள்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட காரில் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மக்கள் வழிமறித்து முற்றுகையிட்டதோடு, 15 தினங்களாகக் குடிதண்ணீர், மின்சாரம் கிடைக்காமல் தவித்து வருவதாகக் கூறி முறையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

நிர்மலா சீதாராமன்

தஞ்சாவூர், நாகை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களிலும் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களின்  குறைகளைக் கேட்பதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் விமானம் மூலம் தஞ்சாவூர் வந்தார். நேற்று, வேதாரண்யம் பகுதிகளைப் பார்வையிட்டவர்,  இன்று தஞ்சாவூரிலிருந்து  பேராவூரணிக்கு காரில் புறப்பட்டார்.  தமிழிசை, ஹெச்.ராஜா, கலெக்டர் அண்ணாத்துரை ஆகியோரும் உடனிருந்தனர். நிர்மலா சீதாராமன், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட பாப்பாநாடு சென்றுகொண்டிருக்கும்போது,  சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டுவந்து, சாலைக்கு நடுவே மரத்தைப் போட்டு மறியலில் ஈடுபட்டனர். மேலும், காரில் அமர்ந்திருந்த நிர்மலா சீதாராமனை முற்றுகையிட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீஸார், அவர்களைத் தடுக்க முடியாமல் திணறினர்.

அப்போது தமிழிசை, ஹெச்.ராஜா ஆகியோர் காரில் இருந்து இறங்கிவந்து, ``மேடம் சீக்கிரமா பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கச் செல்ல வேண்டும், வழி விடுங்க'' என்று கூறினர். ''நாங்களும் புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம் எங்கள் குறைகளையும் கேட்க வேண்டும்'' என மக்கள் கூறினர். 10 நிமிடத்திற்கு மேல் இந்த வாக்குவாதம் நடைபெற்றதால்,  காரை விட்டு இறங்கி வந்த நிர்மலா சீதாராமன், ''எல்லோரும் பேசாம,  ஒருத்தர் மட்டும்  வந்து உங்க குறைகளைச் சொல்லுங்க'' என்றார்.

ஆம்பலாபட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவர், ''புயல் அடித்த நாளில் இருந்து இதுவரை எந்த ஒரு அமைச்சரும், அதிகாரியும் எங்கள் பகுதியைப் பார்வையிடவில்லை.15 தினங்களுக்கு மேலாக நாங்கள் குடிநீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறோம். மேலும், புயலால் உடைமைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு, ஆறுதல் கூறக்கூட யாரும் வரவில்லை. உடனடியாக குடிநீர், மின்சாரம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான உத்தரவாதம் கொடுத்தால்தான் நாங்கள் வழி விடுவோம்'' என்றனர்.  இவ்வளவு பிரச்னை நடந்தும்  கலெக்டர் அண்ணாத்துரை காரை விட்டு இறங்கி வரவில்லை. நிர்மலா சீதாராமன் அழைத்தும், கலெக்டர்  வரவே இல்லை. உடனே நிர்மலா சீதாராமன் தனது உதவியாளரை அழைத்து, கலெக்டரை அழைத்து வரச் சொன்னார்.

.பொதுமக்கள்

அதன்பிறகு வந்த கலெக்டர் அண்ணாத்துரையிடம், ''ஒரு பகுதியே ஒண்ணுமே கிடைக்காம இருந்திருக்கு இந்த வழியாதான் எல்லாம் போறீங்க செஞ்சு கொடுக்காம என்னதான் செய்தீங்க'' என கேட்டதோடு, ''இன்னும் இரண்டு நாட்களில் இவர்களுக்கு குடிதண்ணீர், மின்சாரம் கிடைக்க ஏற்பாடுசெய்யுங்கள்'' என்று கூறி, மக்களிடமும் அதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்தார். அப்போது, ''ரோட்டை மறைக்க வேண்டும் என எங்களுக்கு ஆசை இல்லை.  நாங்க என்ன சாப்பிட சோறா கேட்டோம்; அடிப்படைத் தேவைகளைத்தானே கேட்டோம். ஆனால், அதைக்கூட அதிகாரிகள் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அதனால்தான் சாலையை மறைக்கவேண்டிய  நிலை ஏற்பட்டது'' என நிர்மலா சீதாராமனிடம் மக்கள் வெள்ளந்தியாகக் கூறினர். அதன்பிறகு, நிர்மலா சீதாராமன் பேராவூரணி பகுதியில் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளைப் பார்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டவர், மீண்டும் தஞ்சாவூர் வந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க