இரண்டு வருடங்களாக திறக்கப்படாத தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை! | Thalainayar cooperative sugar factory not yet to be opened

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:22:30 (30/11/2018)

இரண்டு வருடங்களாக திறக்கப்படாத தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை!

நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்படாமல் மூடப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் நஷ்டமடைந்துள்ள விவசாயிகளும் இவ்வருடம் இப்பகுதியில் கரும்பு சாகுபடி செய்துள்ள  விவசாயிகளும் இந்த வருடமாவது ஆலை திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்த தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இந்தியாவிலேயே கரும்பு விவசாயிகளுக்கு போனஸ் அளித்த ஒரே சர்க்கரை ஆலையாகத் திகழ்ந்து புகழ்பெற்றது. தனது சிறப்பான செயல்களுக்காகப் பல சிறப்பு பரிசுகளைப் பெற்ற இந்த ஆலை தற்போது அழிவின் விளிம்பில் நிற்கிறது. இந்த ஆலையில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக அரைத்த கரும்புக்கான நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காததால் கரும்பு விவசாயிகள் கடனாளியாகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து சரிவர செயல்படாத இந்த ஆலை கடந்த 2016-ல் மூடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை திறக்கப்படவில்லை.

தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை

நிலுவைத் தொகைக்காகவும் இப்பகுதியில் நலிந்து வரும் கரும்பு விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டியும், ஆலையை இயக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளதால் விவசாயிகள் தங்கள் கரும்பு பயிர்களை தனியார் ஆலைகளிடம் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டது 1 ஏக்கர், 2 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்த ஏழை, எளிய விவசாயிகள்தான். அவர்கள் கரும்பு விவசாயத்தைக் கைவிட்டு நெல் விவசாயத்துக்கு மாறிவிட்டனர்.  2012-ம் ஆண்டு 8,600 ஏக்கர் அளவில் கரும்பு விவசாயம் நடந்துவந்த நிலை மாறி 2014-15-ல் 3,600 ஏக்கராக குறைந்தது. 2015 அரவை பருவத்தில் டன் ஒன்றுக்கு ரூ.350 என பாக்கி வைத்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் கடனிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.

இந்த நிலுவைத்தொகை கடனாலும், வேறு சில குளறுபடிகளாலும் 2016-ம் ஆண்டு மூடப்பட்ட இந்த ஆலை 2017, 18-ஐத் தொடர்ந்து 2019-லும் திறக்கப்படும் வழியின்றி உள்ளது. இதனால் பல விவசாயிகள் கரும்பு விவசாயத்தைக் கைவிட்டுவிட்டனர். தற்போது இந்த ஆலைக்காகக் கரும்பு பயிரிடும் அளவு ஆயிரம் ஏக்கருக்கும் கீழ் குறைந்துவிட்டது.

விவசாயிகள் பல முறை கோரியும் இந்த ஆலையை இயக்கவோ தேவையான நிதியை வழங்கவோ அரசு முன்வரவில்லை. இந்த சூழ்நிலையில், அ.தி.மு.க-வின் செல்வாக்கில் நடைபெற்ற கூட்டுறவு சங்கத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வேண்டியவர்களே தேர்தெடுக்கப்பட்டதால் இந்த ஆலை பற்றி யாரும் கண்டுகொள்வதேயில்லை. இதனால் விரக்தி அடைந்துள்ள கரும்பு விவசாயச் சங்கத்தினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதற்கிடையில் இவ்வருடம் சாகுபடி செய்யப்பட்ட கரும்புகளின் நிலையை நினைத்து விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.