படகை மூழ்கடித்து இலங்கைக் கடற்படை அட்டூழியம் - வேலைநிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்! | Complain against the Sri Lankan Navy, who drowned the boat; fishermen announce strike

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (30/11/2018)

கடைசி தொடர்பு:23:00 (30/11/2018)

படகை மூழ்கடித்து இலங்கைக் கடற்படை அட்டூழியம் - வேலைநிறுத்தத்தை அறிவித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீன்பிடிப் படகை முட்டி, மூழ்கடித்த இலங்கைக் கடற்படைமீது நடவடிக்கை எடுக்கக் கோரி, படகின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இலங்கை மீனவர்கள் தாக்குதல்

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் காலை, வேலாயுதம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் காட்டுராஜா, தங்கவேலு, ராமு, வர்க்கீஸ் ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள், அன்று மாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், தங்கள் கப்பலினால் தமிழக மீனவர்களின் படகை முட்டி, கடலில் மூழ்கடித்ததுடன், படகில் இருந்த 4 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை கரை திரும்பிய மற்ற மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் படகு மூழ்கடிக்கப்பட்டதுகுறித்தும், மீனவர்கள் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டதுகுறித்தும், மூழ்கிய படகின் உரிமையாளர் வேலாயுதத்திடம் தெரிவித்துள்ளனர்.

வேலாயுதமும், தனது படகைக் கடலில் மூழ்கடித்த இலங்கைக் கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்கள் நால்வரும், இலங்கைக் கடற்படையினரால் காங்கேசன் துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காங்கேசன் துறை போலீஸார், மீனவர்களை இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஆனந்த ராஜா, மீனவர்களை டிசம்பர் 14-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறிய செயலைக் கண்டித்தும், சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள், நாளை ஒரு நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.