திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்ம மரணம் - தீவிர விசாரணை! | Farmer death at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (30/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (30/11/2018)

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்ம மரணம் - தீவிர விசாரணை!

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த விவசாயி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மர்மமாக உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விவசாயி

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. இவர் மனைவி ராதிகா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இந்நிலையில் சுப்பிரமணி மட்டும் அவரது இல்லத்தில் தனியாக வசித்து வரவே, இன்றைய தினம் வழக்கம்போல சுப்பிரமணியின் தாயார் சுப்பிரமணிக்கு உணவு கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அங்கு வீட்டின் கதவு திறந்தே கிடந்திருக்கிறது.

இதையடுத்து தாயார் உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, கை கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருந்த நிலையில் சடலமாக வீட்டுக்குள் கிடந்திருக்கிறார் சுப்பிரமணி. அவரது தலையில் பலத்த காயங்களும் இருந்திருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தாயார், உடனடியாக அக்கம்பக்கத்தினரிடம் சென்று பதற்றத்துடன் தகவலை சொல்லியிருக்கிறார். அதன் பிறகு காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த விவசாயி மர்மமாக மரணித்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது.