வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:09 (01/12/2018)

``டெல்டா மட்டுமல்ல.. நாங்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்!” - கஜாவால் கலங்கும் கரூர் விவசாயிகள்

``கரூர் மாவட்டம், கடவூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவாக கணக்கெடுப்பு நடத்தி அரசு நிவாரணம் வழங்க வேண்டும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி சிதைத்தப் பகுதிகளில் கரூர் மாவட்டம், கடவூர் பகுதியும் ஒன்று. புயல் அடித்து 14 நாள்கள் கடந்தும் இங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிக் கிடக்கிறது. கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இங்கே சரிசெய்யப்படவில்லை. கரூரின் கடைக்கோடி பகுதி, கிழக்கில் திருச்சி மாவட்டமும், தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும் ஒட்டிய பகுதிதான் கரூர் மாவட்ட கடவூர் வட்டம். இங்குள்ள மக்கள் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆனால், கஜா புயலால் பல லட்சங்களை இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் கணக்கிடப்பட்டு நிவாரணப் பொருள்கள் மட்டுமே வழங்கப்பட்டது. அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த ஒரு வார காலமாக போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் கட்சி உறுப்பினர்களாகப் பார்த்துப் பார்த்து நிவாரணப் பொருள்களை வழங்கி விட்டு சென்றுள்ளார்கள் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்த நிலையில், விவசாய நிலங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள், கடலை, சோளம், பருத்தி பயிர்கள், கரும்பு, கிழங்கு உள்ளிட்ட பயிர் வகைகள் தென்னை மரங்கள், தேக்கு மரங்கள், முருங்கை மரங்கள், மா, பலா, வாழை மரங்கள் பெரும் அளவில் பயிர் செய்யப்பட்ட பயிர்கள் முற்றிலும் புயலால் சேதமுற்றுள்ளன. இந்த நிலையில், `வேளாண்மைத் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் இன்னும் பார்வையிட்டு கணக்கீடு செய்யத் துவங்கவில்லை' என்பது  விவசாயிகளைக் கவலைகொள்ள செய்துள்ளது.

இதுகுறித்து கடவூர் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி மாணிக்கம் கூறுகையில், மாணிக்கம்``டெல்டாவை மட்டுமல்ல, கரூரையும் கஜா புயல் சின்னாபின்னமாக்கி இருக்கிறது. ஆனால், எல்லோரும் டெல்டாவை மட்டும் காட்டுறாங்க. கடவூர் தாலுக்கா, மாவூத்துர் கிராமம், சின்னாம்பட்டி பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கிழங்கு, பருத்தி, தேக்கு மரங்கள், பலா மரங்கள் உள்ளிட்டவை பயிரிட்டிருந்தோம். சுமார் 5 லட்சம் முதலீட்டில் மேற்கொண்டு இருந்த இந்த பயிர்களும், மரங்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டு, உருக்குலைந்து போயுள்ளன.
சுழற்றி அடித்த காற்றில் எண்ணற்ற தேக்கு மரங்கள் சாய்ந்தும், கிழங்கு அறுவடை காலத்துக்கு முன்னரே சாய்ந்தும் உள்ளது. இத்தனைநாள் இரவு பகல் பாராமல் உழைத்த மொத்த உழைப்பும் வீணாக்கி விட்டது. ஆனால், இதுவரை எந்த அதிகாரியும் எங்க பாதிப்புகளை வந்து பார்வையிட்டு கணக்கீடு செய்யவில்லை. தமிழக அரசு என்னைப் போன்று பாதிக்கப்பட்ட கடவூர் பகுதி விவசாயிகளுக்கு விரைவாக நிவாரணம் வழங்கி எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.