வெளியிடப்பட்ட நேரம்: 01:45 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:20 (01/12/2018)

`யானை செத்தா தப்பு இல்ல.. எங்க உசுரு போகுது..!’ - ஆட்சியர் அலுவலகத்தை அதிர வைத்த கோவை விவசாயிகள்

கோவையில் காட்டு யானையை இடமாற்றம் செய்யும்போது, அது உயிரிழந்தால் தவறே இல்லை என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

விவசாயிகள்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி, ``கோவை தடாகம் பகுதியில் சுற்றித் திரியும் விநாயகன் என்ற ஒற்றை யானையை கடந்த 25-ம் தேதிக்குள் பிடிப்பதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தும் இதுவரை அந்த யானையைப் பிடிக்கவில்லை. அந்த யானையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானையை இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது சுட்டுக்கொல்ல உத்தரவிட வேண்டும். அந்த உத்தரவு வரும் வரை தாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம்" என்று கூறினார்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோர் தலைமை பாதுகாவலருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவசாயிகள் பிரச்னை குறித்தும் தற்போது உள்ள நிலை குறித்தும் விளக்கினர். அதையடுத்து, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை வனத்துறை உயரதிகாரிகள், விவசாயிகள், வனத்துறை மருத்துவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நடத்துவதாக தலைமை வனப் பாதுகாவலர் ஆட்சியரிடம் தெரிவித்தார். இதனால் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர். மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை முடிவு எட்டப்படாத பட்சத்தில் அங்கேயே உள்ளிருப்புப் போராட்டம் மேற்கொள்வோம் என்று விவசாயிகள் கூறினர்.

முன்னதாக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கந்தசாமி மாவட்ட ஆட்சியரிடம் பேசும்போது, ``யானையை வேறு இடத்துக்கு மாற்றும்போது, அது செத்துப்போனால் தப்பே இல்ல.. எங்க உசுரு போகுது. அந்த யானை போனால் என்ன ஆகிடப்போகுது..?" என்று பேசினார். இவரின் இந்தப் பேச்சு பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது.