வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (01/12/2018)

கடைசி தொடர்பு:07:27 (01/12/2018)

`மீ டூ’ கேள்வி வேண்டாமே ப்ளீஸ்! - பத்திரிகையாளர் சந்திப்பில் ஆண்ட்ரியா வேண்டுகோள்

ஈரோட்டில் தனியார் கண் மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவில் நடிகை ஆண்ட்ரியாகலந்துகொண்டு திறந்து வைத்தார். ஏற்கெனவே மேம்பாலப் பணி, பாதாள சாக்கடைப் பணி மற்றும் மின் கேபிள் பதிக்கும் பணி என ஈரோடு மாநகரமே தினமும் டிராஃபிக்கால் சிக்கித் திணறிவரும் வரும் வேளையில், ஆண்ட்ரியாவின் வருகை மேலும் ஆல்லோகலப்படுத்தி விட்டது.

மீடூ குறித்து ஆன்ட்ரியா

ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகே தான் அந்தத் தனியார் கண் மருத்துவமனை இருந்தது. ஆண்ட்ரியாவைப் பார்க்க வேண்டுமென இளைஞர்கள் கூட்டம் அலைமோத, சில மணி நேரங்கள் அந்தப் பகுதியில் கடும் டிராஃபிக் ஜாம் ஆனது. ஜிம் பாய்ஸ் போராடித்தான் மருத்துவமனையினுள் ஆண்ட்ரியாவை அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனை

ரிப்பன் வெட்டித் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றிவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா, ``எல்லோரும் உங்களுடைய கண்களைத் தானம் செய்யுங்கள். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை அது. நம்முடைய வாழ்க்கைக்குப் பிறகு அது மற்றவர்களுக்குப் பயன்படும். நான் ஏற்கெனவே என்னுடைய கண்களை தானம் செய்திருக்கிறேன்” என்றார். 

மீ டூ-வைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என பத்திரிகையாளர்கள் கேட்ட முதல் கேள்விக்கே, ``மீ டூ-வைப் பத்தி ஏங்க கேக்குறீங்க! அது வேணாமே... கண் மருத்துவமனை திறப்பு விழாவுக்காக வந்திருக்கேன். அதைப்பற்றி ஏதாவது கேளுங்கள்” எனப் பதறிப்போனார். ‘நீங்க என்ன ஆப்தமாலஜியா முடிச்சிருக்கீங்க. அதுசம்பந்தமாக உங்ககிட்ட கேக்குறதுக்கு?’ என பத்திரிகையாளர்கள் கடுகடுக்க, ``இல்லைங்க, மீ டூ பத்தி நான் சரியா படிக்கலை. எனக்குத் தெரியாமல் நான் ஏதாவது பேசக்கூடாது இல்லையா!” எனக் கூறிய ஆண்ட்ரியா ஒரு கட்டத்தில், ``எல்லா டைம்லயும் இந்தப் பிரச்னை நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனா, இப்போது தான் தங்களுக்கு நடந்த அநியாயங்களைப் பற்றிப் பேச பெண்களுக்குத் தைரியமும் வலிமையும் வந்திருக்கிறது. பயத்தால நிறைய பெண்கள் பேசாம விட்டுடுறாங்க. இப்போ இந்தக் காலத்துப் பொண்ணுங்க, அந்த பயத்தைத் தாண்டி நான் பேசுவேன்னு சொல்றாங்க. அது பெரிய விஷயம். ஒரு பத்து பேர் சும்மா கதையும் பேசுவாங்க. ஆனா, உண்மையைப் பேசுற ரெண்டு பேரை நாம மதிக்கணும்” என்றார்.

மீடு குறித்து ஆன்ட்ரியா

இசையமைப்பாளர்களுக்கு ராயல்டி தொகை தரவேண்டுமென்ற இளையராஜாவின் கோரிக்கை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆண்ட்ரியா, ``ஒரு பாடகரோட பங்களிப்பையும், பாடலாசிரியருடைய பங்களிப்பையும், இசையமைப்பாளருடைய பங்களிப்போடு கம்பேர் செய்ய முடியாது. ஒருசில இசையமைப்பாளர்கள் பாடலோட ரைட்ஸை அவங்களே வச்சிப்பாங்க. சிலபேர் தயாரிப்பாளரிடம் கொடுத்திடுவாங்க. அது எல்லாம் அவங்கவங்க அக்ரீமென்ட் சம்பந்தப்பட்ட சட்டரீதியான பிரச்னை. நான் லாயர் கிடையாது. தயவுசெஞ்சி எங்கிட்ட இதெல்லாம் கேக்காதீங்க” என்றார்.