சென்னை டு மதுரை... விரைவில் வருகிறது தேஜஸ் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே அறிவிப்பு | Southern Railway to run Tejas train between Chennai Egmore and Madurai

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:10:10 (01/12/2018)

சென்னை டு மதுரை... விரைவில் வருகிறது தேஜஸ் எக்ஸ்பிரஸ் - தென்னக ரயில்வே அறிவிப்பு

இந்தியாவின் அதிவேக விரைவு குளிரூட்டப்பட்ட ரயிலான தேஜஸ் மதுரை - எழும்பூர் இடையே தனது சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வாரத்துக்கு ஐந்து நாள்கள் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 200 கி.மீ வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் தொடக்கத்தில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் வாரத்துக்கு ஐந்து நாள்கள் இயக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜஸ் ரயில்


இன்னும் ஒரு வார காலத்துக்குள் தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில், தானியங்கிக் கதவுகள், LED திரை, சொகுசான இருக்கைகள், இணைய வசதி, உயர் தரத்திலான கழிப்பறை வசதிகளைக் கொண்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்தை ஆறரை மணி நேரத்தில் சென்று சேர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு அன்று இரவு மதுரையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து சேரும் என்றும் சொல்லப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (30.11.18) அன்று இந்த ரயில், சென்னை ரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, வில்லிவாக்கம் தென்னக ரயில்வே சரகத்துக்குட்பட்ட எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் தொடக்கத்தில் சிறப்பு ரயிலாக இயக்கப்படும் எனவும் பின்னர் வழக்கமாக இயக்கப்படும் எனவும் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதன் முதல் சேவையை மும்பைக்கும் கோவாவுக்கும் இடையே தொடங்கியது. தற்போது தமிழகத்திலும் அறிமுகப்படுத்தித் தொடங்கப்படவுள்ளது.