மார்த்தாண்டத்தை அதிரவைக்கும் சைக்கோ வாலிபர் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை! | Psycho man kills watch man in marthandam

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (01/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (01/12/2018)

மார்த்தாண்டத்தை அதிரவைக்கும் சைக்கோ வாலிபர் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சி.எஸ்.ஐ தேவாலயத்தின் காவலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த சைக்கோ வாலிபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் நடமாடுபவர்கள் தாக்கப்படுவதும், கார்கள் உடைக்கப்படுவதும் தொடர்வதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சுந்தர் ராஜ்

கன்னியாகுமரி மாவட்டம் பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (65). இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 28-ம் தேதி இவர் பணியில் இருந்த நேரத்தில் நள்ளிரவு வாலிபர் ஒருவர் தேவாலயத்தின் முன் வந்து நடனமாடியுள்ளார். நீண்ட நேரமாக குறுக்குமறுக்காக ஓடுவதைப் பார்த்த காவலாளி அவரிடம் ஏன் இங்கு நிற்கிறாய் என்று கேட்டுள்ளார். அந்த வாலிபர் திடீரென காவலாளியைத் தாக்கியுள்ளார். கீழே விழுந்த காவலாளி மீது சாலையில் கிடந்த இரண்டு கற்களை தூக்கிப் போட்டுள்ளார். ரத்தக்கறை படிந்த கல்லை தேவாலய படிக்கட்டில் வைத்தவர் பிறகு அந்தக் கல்லை தூக்கி புதருக்குள் வீசியிருக்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலாளி முன்பு நிர்வாணமாக நடனமாடி விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் அந்த வாலிபர். 

படுகாயத்துடன் கிடந்த காவலாளியைக் கண்ட சிலர் மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்ந்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த காவலாளி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுபோன்று அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனை முன்புறம் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்துள்ளார். தொடர்ந்து சாலையில் நடந்து வந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். தொடரும் இந்தத் தாக்குதல் சம்பவங்களால் மார்த்தாண்டம் பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். மருத்துவமனை உள்ளிட்ட சில பகுதிகளில் நடமாடும் அந்த வாலிபரின் உருவம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்துவருகின்றனர்.