ரயிலை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்; மின்னல் வேகத்தில் எடுத்துச்சென்ற டிரைவர்! - காஞ்சியில் பரபரப்பு | Land acquisition for Railway track : Court took action against railways

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (01/12/2018)

கடைசி தொடர்பு:10:52 (01/12/2018)

ரயிலை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்; மின்னல் வேகத்தில் எடுத்துச்சென்ற டிரைவர்! - காஞ்சியில் பரபரப்பு

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் ரயில் பாதை விரிவாக்கத்தின் போது பொதுமக்கள் இடத்துக்கு குறைவான இழப்பீடு கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் ரயிலை ஜப்தி செய்ய காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக மாவட்ட ஆட்சியர் கார், ரயில் இன்ஜின் ஆகியவற்றை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

இழப்பீடு கோரி ரயில் ஜப்தி

செங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் வரை ரயில் பாதை விரிவுபடுத்துவதற்காக பொதுமக்களின் நிலத்தை ரயில்வே நிர்வாகம் எடுத்துக் கொண்டது. காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா, தர்குனிஷா, பாலுசெட்டி சத்திரம் பகுதியைச் சேர்ந்த மும்தாஜ், வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த நிஷார் அகமது ஆகியோர்களுக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் ஒரு சென்ட் நிலத்தைக் கடந்த 1999-ம் ஆண்டு ரயில்வே நிர்வாகம் கையப்படுத்தியது. ஆனால், நிலமதிப்பைவிடக் குறைந்த மதிப்பில் பணம் கொடுத்ததாக ரயில்வே நிர்வாகத்தின் மீது நான்கு பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி, நான்கு பேருக்கும் தலா 37 லட்சத்து 66 ஆயிரத்து 574 ரூபாய் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனக் கடந்த மூன்று மாதத்துக்கு முன் உத்தரவு பிறப்பித்தார்.

இழப்பீடு கொடுக்க மறுக்கும் பட்சத்தில் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் அல்லது விரிவாக்கம் செய்யப்பட்ட பாதையில் செல்லும் ரயில் இன்ஜின் ஆகியவற்றை ஜப்தி செய்யலாம் என உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நீதிமன்ற ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரின் காரை ஜப்தி செய்வதற்காக வந்தனர். அப்போது மாவட்ட நிர்வாகம் தரப்பில் இழப்பீட்டு தொகையை கொடுக்க ஒருநாள் அவகாசம் கேட்டுக் கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அவர்கள் திரும்பி சென்றனர். இதைத் தொடர்ந்தும் அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால் நேற்று புதுச்சேரியிலிருந்து காஞ்சிபுரம் வழியாகத் திருப்பதி செல்லும் ரயிலை ஜப்தி செய்வதற்காக நீதிமன்ற ஊழியர்கள் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ரயில் ஓட்டுநரிடம் நீதிமன்ற உத்தரவைக் காட்டினார்கள். இருதரப்பினருக்கும் 20 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடந்தது. இதனால் காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிக்னல் விழுந்ததால் பேச்சுவார்த்தை நடக்கும்போதே ரயிலை டிரைவர் மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து ரயில் ஓட்டுநர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சென்றுவிட்டதாக நீதிமன்ற அவமதிப்பு தொடர உள்ளதாக இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க