`பங்கேற்காதது ஏன்?' - மதிக்காத ரயில்வே அதிகாரிக்கு சட்டமன்ற உறுதிமொழிக்குழு நோட்டீஸ் | Notice issued against railway official

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (01/12/2018)

கடைசி தொடர்பு:12:15 (01/12/2018)

`பங்கேற்காதது ஏன்?' - மதிக்காத ரயில்வே அதிகாரிக்கு சட்டமன்ற உறுதிமொழிக்குழு நோட்டீஸ்

வேலூரில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் உத்தரவை மதிக்காமல் கூட்டத்தை ரயில்வே தலைமை அதிகாரி புறக்கணித்தார். இதனால் வெறுப்படைந்த உறுதிமொழிக்குழு, அந்த அதிகாரிக்குக் கடிவாளம் போடுவதற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உறுதிமொழிக்குழு

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை சட்டமன்ற உறுதிமொழிக் குழு இரண்டு நாள்களாக ஆய்வு செய்தது. பின்னர், இம்மாவட்டத்துக்காக 72 துறைகளின் சார்பில் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட 265 உறுதிமொழி கேள்விகளின் மீதான பதில்கள் குறித்து துறைவாரியான அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது உறுதிமொழிக் குழுத் தலைவர் இன்பதுரை பேசுகையில், ``வேலூர் மாநகராட்சி அரியூர் மற்றும் கஸ்பா பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் நிலுவையில் உள்ளது. இதை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கச் சென்னை மண்டல ரயில்வே துணை முதன்மை பொறியாளருக்கு (கட்டுமானம்) உத்தரவிட்டோம். ரயில்வே அதிகாரி நேரில் விளக்கமளிக்கவில்லை. அவருக்கு உறுதிமொழிக் குழு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை வரும் 17-ம் தேதிக்குள் சென்னையில் உறுதிமொழிக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க அந்த ரயில்வே அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.