வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (01/12/2018)

கடைசி தொடர்பு:12:36 (01/12/2018)

` ஐந்து மண்டலங்களில் யாருக்கெல்லாம் வெற்றி?!'  - ஸ்டாலின் கவனத்துக்குச் சென்ற களநிலவரம் 

மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்த்தபோது, `50, 60 சதவிகித வாக்குகளுக்கு மேல் கிடைக்கும்' என எதிர்பார்த்த நிலையில், மாநில சராசரியைவிடக் குறைவாக 38 சதவிகித வாக்குகள்தான் கிடைத்தன.

` ஐந்து மண்டலங்களில் யாருக்கெல்லாம் வெற்றி?!'  - ஸ்டாலின் கவனத்துக்குச் சென்ற களநிலவரம் 

திருமாவளவன், வைகோ ஆகியோர் உடனான சந்திப்பின் மூலம், அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். `ஒவ்வொரு மண்டலத்திலும் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்தும் ஸ்டாலினிடம் விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில். 

நாடாளுமன்றத் தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்வதற்கான பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறது தி.மு.க தலைமை. இதற்காக, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து, பூத் கமிட்டி பணிகளை வேகப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். இந்தப் பொறுப்பாளர்கள், ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டம் போட்டு நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர். `ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் 20 பேரை நியமிப்பது எனவும் அதில் 5 பேர் பெண்களாக இருக்க வேண்டும்' எனவும் தி.மு.க தலைமை அறிவுறுத்தியுள்ளது. அதற்கேற்ப, வாக்குச்சாவடி வாரியாக ஆய்வு நடத்தி வருகின்றனர் தேர்தல் பொறுப்பாளர்கள். இந்தப் பணிகள் ஒருபுறம் நடந்து வந்தாலும், கடந்த தேர்தல்களில் தொகுதிவாரியாக தி.மு.க-வுக்குக் கிடைத்த வெற்றி, தோல்விகளை விரிவாக ஆராய்ந்து வருகிறார் ஸ்டாலின். இதை துல்லியமாக ஆராயும் பணிகள், தி.மு.க-வின் மார்க்கெட்டிங் டீமுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக, தமிழகத்தை ஐந்தாகப் பிரித்து புள்ளிவிவரங்களை எடுத்துள்ளனர். 

அண்ணா அறிவாலயம்

களநிலவர அறிக்கை குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` சென்னை தலைநகர், புறநகர், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தென்மண்டலம் என ஐந்தாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், விடுதலைச் சிறுத்தைகளுக்குச் செல்வாக்கு மிகுந்த 20 தொகுதிகள், பா.ம.க-வுக்கு வாக்குவங்கியாக இருக்கும் 80 தொகுதிகள் என அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டனர். இதுதொடர்பான அறிக்கையை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அந்த அறிக்கையில், ` 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகளின் கூட்டணி, வடமாவட்டங்களில் 45 சதவிகித வாக்குகளை எடுத்துள்ளது.

ஆனால், 2011 சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்த்தபோது, `60 சதவிகித வாக்குகளுக்கு மேல் கிடைக்கும்' என எதிர்பார்த்த நிலையில், மாநில சராசரியைவிடக் குறைவாக 38 சதவிகித வாக்குகள்தான் கிடைத்தன. ` இந்தக் கூட்டணி 90 சீட்டுகளை ஜெயிக்கும்' என திருமாவளவன்வி.சி.க நிர்வாகிகள் அப்போது பேசினர். ஆனால், எட்டு இடங்களில்தான் வெற்றி பெற முடிந்தது. இதற்குக் காரணம், தி.மு.க-வைக் கடுமையாக விமர்சித்து வந்த பா.ம.க-வைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதால், மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தக் கூட்டணிக்குள் வி.சி.க-பா.ம.க நட்பு என்பது எடுபடவில்லை. இதன்பிறகு, 2014 தேர்தலில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டது. 2016 தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியும் உருவானது. 

இந்தத் தேர்தலில் வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்குச் செல்வாக்காக இருக்கும் பகுதிகளில் அ.தி.மு.க-வைவிடவும் தி.மு.க பெரிய அளவில் வெற்றி பெற்றது. தமிழக அளவில் அ.தி.மு.க, தி.மு.க அணிகளுக்கு இடையேயான வித்தியாசம் ஒரு சதவிகிதம்தான். ஆனால், வடக்கு மாவட்டங்களில் அ.தி.மு.கவை விடவும் நான்கு சதவிகித வாக்குகளை கூடுதலாக எடுத்திருக்கிறது தி.மு.க. மேலும், தென்மண்டலத்தை அப்பர் சவுத், டவுன் சவுத் என இரண்டாகப் பிரித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்பர் சவுத் எனப்படும் மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய பகுதிகளில் தி.மு.க பலவீனமாக இருக்கிறது. அங்கு வைகோவுக்கு ஓரளவுக்கு வாக்குகள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிய தமிழகம் இல்லை. டவுன் சவுத் எனப்படும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் தி.மு.க-வுக்கான வாக்குவங்கி நல்லபடியாக இருக்கிறது. முக்குலத்தோர், வேளாளர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் மட்டும் தி.மு.க கொஞ்சம் வீக்காக இருக்கிறது' எனக் குறிப்பிட்டுள்ளனர்" என்றவர், 

`` வடபுலத்தில் தி.மு.க பலமாக இருக்கிறது. அதனால்தான், ` மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் இணைத்தால், நாம் செல்வாக்காக இருக்கும் தொகுதிகளையும் அவர்கள் கேட்பார்கள். எனவே, கூட்டணிக்குள் சிலரை சேர்க்காமல் இருப்பதே நல்லது' என தி.மு.க சீனியர்கள் சிலர் குரல் எழுப்பினர். அவர்களை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டார் ஸ்டாலின். `சிதம்பரத்தில் போட்டியிடுவேன்' என திருமாவளவன் தன்னிச்சையாக அறிவித்ததையும் தி.மு.க சீனியர்கள் ரசிக்கவில்லை. `ஜெயலலிதாவோடு கூட்டணியில் இருந்திருந்திருந்தால் இப்படியெல்லாம் அறிவித்துவிட முடியுமா?' என அவர்கள் ஆதங்கப்பட்டனர். ஜெயலலிதா என்ன பலத்தில் இருந்தாரோ அதே பலத்தில்தான் இப்போது ஸ்டாலினும் இருக்கிறார். 2016 தேர்தல் முடிவுகளைப் பார்க்கிறவர்களுக்கு இது தெரியும். தேர்தல் நெருங்கும் வரையில் கூட்டணியைக் குழப்பும் வேலைகளில் சிலர் இறங்குவார்கள் என்பதை அறிந்து, ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நிதானமாகவே எடுத்து வருகிறார் ஸ்டாலின்" என்றார் விரிவாக.