வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:14 (02/12/2018)

`தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள்!' - விவசாயிகளை வசைபாடிய பொன்.ராதாகிருஷ்ணன்

29 மாநில விவசாயிகள் இணைந்து டெல்லியில் இரண்டு நாள் பேரணி நடத்தினர். டெல்லி ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி இந்தப் பேரணி நடத்தப்பட்டது. விளைபொருள்களுக்கு உரிய விலை, பயிர்க் காப்பீடு, பயிர்க் கடன் தள்ளுபடி, விவசாயிகள் தற்கொலை, எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இப்பேரணியில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் காலை டெல்லி ரயில் நிலையத்தில் வந்திறங்கியபோதே தமிழக விவசாயிகள் அங்கேயே ரயில் மறியல் செய்தனர். பின்னர், போலீஸாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இதேபோல் நேற்று நடந்த பேரணியின் போதும், அரைநிர்வாணமாக மண்டைஓடு, எலும்புகளுடன் தமிழக விவசாயிகள் ஊர்வலமாகச் சென்றனர். 

பொன் ராதாகிருஷ்ணன்

விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் நாட்டின் தலைநகரத்தில் போய் பல்வேறு மாநில விவசாயிகள் மத்தியில் தமிழக விவசாயிகள், தமிழகத்தின் மானத்தை வாங்கும் வகையில் மிகக் கொச்சையான முறையில் இங்கிருந்து சென்ற சிலர் நடந்திருக்கிறார்கள். இது மன்னிக்க முடியாத குற்றம். தமிழர்களை அவமானப்படுத்தியுள்ளார்கள். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்துவதற்கு இங்கு இருக்கும் சில கட்சிகள் அவர்களுக்குப் பண உதவி அளித்து வருகின்றன. தமிழ்  உணர்வு உள்ளவர்கள் இதைக் கண்டிக்க வேண்டும்" என்றார்.

இதேபோல், ``மேக்கே தாட்டூவில் ஆய்வறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. ஆனால், மேக்கே தாட்டூ அணை கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கஜா புயல் நிதி தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை சந்தித்துப் பேசி அறிக்கை கொடுத்துள்ளேன். விரைவில் நல்ல செய்தி வரும்'' எனப் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சீமான் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், ``தகுதியில்லாதவர்கள் தகுதி உள்ள விஷயங்களைக் பேசக்கூடாது. சீமான் அரசியல், சமுதாயம் குறித்து பேசட்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை இல்லையெனில் அதைப் பற்றி பேச வேண்டாம். இந்துக் கடவுள் குறித்து பேச சீமானுக்கு தகுதி இல்லை. யாராக இருந்தாலும் நாகாக்க வேண்டும். இதுபோன்று கேவலமான வார்த்தைகளைப் பேசுபவர்கள் யோக்கியமற்றவர்கள்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க