`அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ!’ - கொந்தளித்த அ.தி.மு.க-வினர் | ADMK slams Disqualified MLA's

வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:45 (01/12/2018)

`அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்ற தகுதி நீக்க எம்.எல்.ஏ!’ - கொந்தளித்த அ.தி.மு.க-வினர்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட குடியாத்தம் பெண் எம்.எல்.ஏ. அரசு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றதால் அ.தி.மு.க-வினர் கடும் வாக்குவாதம் செய்தனர். 

வாக்குவாதம்

டி.டி.வி.தினகரன் பக்கம் சென்று தகுதியிழந்த 18 எம்.எல்.ஏ-க்களில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி பெண் எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபனும் ஒருவர். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் தடுப்பு மையம் சார்பில் நடைபெற்ற விழிப்பு உணர்வு ஊர்வலத்தில் அ.ம.மு.க. ஆதரவாளர்களுடன் ஜெயந்தி கலந்துகொண்டார். ஊர்வலத்தைத் தலைமை தாங்கி அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைப் பார்த்த அ.தி.மு.க. தொண்டர்கள், `தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. அரசு நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்பதா’ என கொதிப்படைந்தனர். உடனடியாக செல்போனில் போட்டோ எடுத்து உள்ளூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினர்.

அடுத்த சில நிமிடங்களில் அ.தி.மு.க. நிர்வாகிகள் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிக்கு வந்தனர். அதற்குள், தகுதி நீக்க எம்.எல்.ஏ. ஜெயந்தி பத்மநாபன் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்து விட்டுச் சென்றுவிட்டார். அங்கு வந்த அ.தி.மு.க நிர்வாகிகள், ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வை அரசு நிகழ்ச்சிக்கு எப்படி அழைக்கலாம். அழைத்து வந்தவர் யார், என்று கேட்டு டாக்டர்களை மிரட்டி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு காணப்பட்டது.