`நாங்க போலீஸ்... உங்கள விசாரிக்கணும்' - முதியவருக்கு நேர்ந்த சோகம்  | Senior citizen cheated by gang

வெளியிடப்பட்ட நேரம்: 13:06 (01/12/2018)

கடைசி தொடர்பு:13:06 (01/12/2018)

`நாங்க போலீஸ்... உங்கள விசாரிக்கணும்' - முதியவருக்கு நேர்ந்த சோகம் 

போலீஸ்

 
சென்னை திருவான்மியூரில் டீ குடிக்க வந்த முதியவரை போலீஸ் எனக்கூறி ஆட்டோவில் கடத்திய கும்பல், அவர் அணிந்திருந்த தங்க நகைகளைப் பறித்துவிட்டு தப்பிசென்றுள்ளனர். 

சென்னை திருவான்மியூர், கேனால் பேங்க் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (70). இவர், தினமும் காலை 6 மணி முதல் 6.30 மணியளவில் டீ குடிக்க கடைக்கு வருவார். வழக்கம்போல நேற்று அவர் இந்திரா நகர் பகுதியில் உள்ள டீ கடைக்கு வந்தார். அப்போது அவ்வழியாக ஆட்டோவில் வந்த இருவர், சுப்பிரமணியிடம் பேச்சுக் கொடுத்தனர். 

``நாங்கள் போலீஸ். உங்களை தினமும் காலை 6 மணியளவில் இந்தப்பகுதியில் பார்க்கிறோம். உங்கள் மீது எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள்' என்று கூறியுள்ளனர். அதற்கு சுப்பிரமணி, `நீங்கள் யார். நான் இந்தப்பகுதியைச் சேர்ந்தவன்' என்று பதிலளித்துள்ளார். சுப்பிரமணியின் விளக்கத்தை கேட்காத அந்தக் கும்பல் வலுக்கட்டாயமாக அவரை ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். காலை நேரம் என்பதால் அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்துள்ளது. இதனால் சுப்பிரமணியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. 

இதையடுத்து, ஆட்டோவில் ஏற்றப்பட்ட சுப்பிரமணி முகத்தில் அந்தக்கும்பல் மயக்க மருந்தை (ஸ்பீரே) அடித்துள்ளனர். இதில் அவர் மயங்கினார். அதன்பிறகு அவர் அணிந்திருந்த மூன்று சவரன் செயின், ஒரு சவரன் மோதிரம், செல்போன் ஆகியவற்றைப் பறித்தனர். பின்னர், ஆட்டோ வேளச்சேரி 100 அடி சாலையில் நிறுத்தப்பட்டது. அங்கு சாலையின் ஓரத்தில் சுப்பிரமணியை விட்டுவிட்டு ஆட்டோவில் அந்தக்கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. 

மயக்கம் தெளிந்த சுப்பிரமணிக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரம், செல்போன் பறிபோனது தெரிந்தபிறகுதான் ஆட்டோவில் வந்தது போலீஸ் இல்லை. கடத்தல் கும்பல் என்று கருதினார். பிறகு, அவ்வழியாகச் சென்ற ஒருவரிடம் செல்போனை வாங்கி, தனக்கு நடந்த சம்பவத்தை உறவினர்களிடம் கூறினார். அதன்பிறகு அங்கு வந்த சுப்பிரமணியின் உறவினர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து சுப்பிரமணி, திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். 

சுப்பிரமணி கடத்தப்பட்ட இடத்திலிருந்து அவரை விட்டுச் சென்ற வேளச்சேரி 100 அடி ரோடு வரையிலான பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில் ஆட்டோ மற்றும் இரண்டு பேரின் உருவம் பதிவாகியுள்ளது. அதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இரண்டு பேரை பார்க்கும்போது அவர் உருவத்தில் போலீஸ் போல தெரிகிறது. இதனால் அவர்கள் உண்மையான போலீஸா என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது. 

முதியவரை கடத்தி நகை, செல்போன் ஆகியவற்றைப் பறித்த சம்பவம் திருவான்மியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.