வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (01/12/2018)

கடைசி தொடர்பு:14:05 (01/12/2018)

`எங்க ஊர்ல 5 ரூபாய்; உங்க ஊர்ல 30 ரூபாயா?' - குரோம்பேட்டையில் ஹோட்டலை சூறையாடிய நெல்லை மாணவர்கள்

சென்னை குரோம்பேட்டையில் பரோட்டா விலை அதிகமாக இருப்பதாக ஏற்பட்ட தகராறில், திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஏழு மாணவர்கள் ஹோட்டலை அடித்து நொறுக்கி இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

பரோட்டா விலை தகராறு

சென்னையில் ஜான் பாண்டியன் தலைமையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்துக்கு திருநெல்வேலி, பளையங்கோட்டை, சிவந்திப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் வந்திருந்தார்கள். பொதுக்கூட்டம் முடிந்து இரவு ஊருக்குக் கிளம்பும்போது, குரோம்பேட்டை காவல்நிலையம் அருகே சாப்பிடுவதற்காக சாலை ஓரத்தில் பேருந்தை நிறுத்தி இருக்கிறார்கள். அப்போது விஜய் (பெயர் மாற்றம்) என்ற மாணவர் அருகில் இருந்த ஹோட்டலுக்குள் சாப்பிடுவதற்காக நுழைந்தார். பரோட்டா எவ்வளவு எனக் கேட்டிருக்கிறார். ஒன்று முப்பது ரூபாய் எனச் சர்வர் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர் அங்கிருந்து வெளியேறினார். பின்பு அவருடன் பேருந்தில் வந்த நண்பருடன் மீண்டும் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்தார். ‘மச்சி இந்தக் கடையிலதான் பரோட்டா முப்பது ரூபாய்டா’ எனத் தெரிவித்திருக்கிறார்.

என்னடா நம்ம ஊருல எல்லாம் அஞ்சு ரூபாய்க்குத்தான் விற்கறாங்க. இங்க என்ன முப்பது ரூபாய் என சொல்லிக்கொண்டே அங்கிருந்த காவலாளியிடம் நக்கலாகக் கேலி செய்திருக்கிறார்கள். இதனால் இருதரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே அவர்கள் அருகில் இருந்த பேருந்துக்குச் சென்று பத்துக்கும் மேற்பட்டவர்களை அழைத்து வந்து மீண்டும் தகராறு செய்தனர். அங்கிருந்த நாற்காலிகள், சமையல் பாத்திரங்கள் சூறையாடப்பட்டன. கொதிக்கும் சுடுநீரை எடுத்து அங்கிருந்த ஊழியர்கள் மீது ஊற்றி இருக்கிறார்கள். தகவல் அறிந்து அருகில் இருந்த காவல்நிலையத்திலிருந்து காவலர்கள் விரைந்தனர். தகராறு செய்த மாவணர்களை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து ஹோட்டலில் தகராறு செய்ததாக விஜய் (16) சிவப்பிரகாஷ், சதீஷ் முத்தையா, வீரபாண்டி, பேரறிவாளன், பாலச்சந்திரன், முத்துக் குமார் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதால், சேதப்படுத்திய பொருள்களை வாங்கிக் கொடுத்துவிடுகிறோம் எனத் தகராறு செய்தவர்கள் தெரிவித்தனர். ஹோட்டல் நிர்வாகத்தினரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்கள். ஆனால், மேலிடம் வரை தகவல் சென்றுவிட்டது எனக் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். விஜய் செங்கல்பட்டு சிறுவர் சிறப்பு இல்லத்துக்கும், மற்றவர்கள் சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு பரோட்டாவுக்கு இத்தனை களேபரமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க