வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (01/12/2018)

கடைசி தொடர்பு:14:43 (01/12/2018)

விரைவில் பரோலில் வருகிறார் சசிகலா!

சிகலாவுக்கு பரோல் கேட்கும் முயற்சிகள் தற்போது நடைபெறுகிறது. விரைவில் அவர் தமிழகம் வரப் போகிறார்.

சசிகலா

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அவரின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான நடராசன் உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் சென்னையில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காகச் சிறையிலிருந்து சசிகலா பரோலில் வந்தார். இறுதிச் சடங்குக்குப் பிறகு தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராசனின் வீட்டில் இருந்தார். அப்போது அவரைப் பலரும் சந்தித்து துக்கம் விசாரித்தனர். பரோல் முடிந்து மார்ச் 31-ம் தேதி மீண்டும் சிறைக்குப் போனார். 

டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது சசிகலாவைச் சிறையில் போய்ப் பார்த்து வந்தனர். 'சசிகலா மீண்டும் பரோலில் வரப் போகிறார்' என்கிற தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இந்தச் சூழலில் அடுத்த வாரம் சசிகலா மீண்டும் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடும்ப உறுப்பினர்களிடையே உள்ள பிரச்னைகள், சொத்துகள் தொடர்பான பிரச்னை, தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம், அ.ம.மு.க. - அ.தி.மு.க. இணைப்பு போன்ற விஷயங்கள் பற்றி சசிகலாவிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு முன்பேகூட அவரது வருகை இருக்கலாம் என சசிகலா உறவுகள் வட்டாரத்தினர் தெரிவித்தனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு ஆஜராவதற்காகக்கூட அவர் வரலாம் என்கிற தகவல் ஆணைய வட்டாரத்திலும் சொல்லப்படுகிறது. 

பொங்கல் பண்டிகையின்போது தஞ்சாவூரில் ஆண்டுதோறும் விழா எடுப்பார் நடராசன். இந்த ஆண்டு பொங்கல் விழாவை நடத்தலாமா என்கிற விவாதம் நடைபெற்றபோது, வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறார்கள் சசிகலா உறவினர்கள். வழக்கமாக மூன்று நாள்கள் நடக்கும் விழாவை ஒரு நாள் நடத்தலாம் என முடிவாகியிருக்கிறது. அந்த விழாவில் நடராசன் பற்றி எழுதிய புத்தகம் வெளியிடப் போகிறார்கள். அந்த புத்தகத்துக்கு சசிகலா தரப்பும் ஒப்புதல் தந்துவிட்டது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க