வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:00 (01/12/2018)

காதலன் கண்முன்னால் காதலிக்கு நிகழ்ந்த சோகம்! - கைகூடாமல்போன திருமணம்

  திருமணம் காதல் ஜோடி விபத்தில் பலி

சென்னை திருவொற்றியூரில் 2 மாதங்களில் திருமணம் நடைபெற இருந்த காதல் ஜோடி, விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சடலங்களைப் பார்த்து பெற்றோரும் உறவினர்களும் கதறி அழுதனர். 

சென்னை எண்ணூர் அருகே தாழங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு. மீனவர். இவரின் மகன் அன்பரசு என்கிற அப்பாஸ் (22). இவரும் மீன்பிடிக்கும் தொழில் செய்துவந்தார். இவருக்கும் திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியைச் சேர்ந்த ஷேக் அலியின் மகள் அமிருநிஷாவும் (20) கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு முதலில் எதிர்ப்புகள் கிளம்பினாலும் பிறகு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். 2 மாதத்தில் திருமணம் நடக்கயிருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு அன்பரசும் அமிருநிஷாவும் திருவொற்றியூரில் உள்ள நண்பரை சந்திக்க பைக்கில் சென்றனர். பின்னர் அங்கிருந்து இரவு 11 மணியளவில், காதலியை அவரின் வீட்டில் விடுவதற்காக அன்பரசு பைக்கில் அழைத்துச் சென்றார். அப்பர் சாமி கோயில் தெரு வழியாக வந்து கொண்டிருந்தபோது, எண்ணூர் விரைவு சாலையில் திரும்பினர். அப்போது ஆந்திராவிலிருந்து  துறைமுகம் நோக்கி அதிவேகமாகச் சென்ற டிப்பர் லாரி, பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது அதே லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி அமிருநிஷா சம்பவ இடத்திலேயே இறந்தார்.  உடனே லாரியை நிறுத்திய டிரைவர், அங்கிருந்து தப்பிவிட்டார். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அன்பரசனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

தகவலறிந்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிவிஸ்வநாதன் மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று அமிருநிஷாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் லாரி டிரைவரைத் தேடிவருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்து இருவரின் சடலங்களும் அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இஸ்லாமிய முறைப்படி அமிருநிஷாவின் இறுதி நிகழ்ச்சியும் இந்து முறைப்படி அன்பரசுக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

 விரைவில் திருமணம் நடக்கயிருந்த காதல் ஜோடி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.