வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (01/12/2018)

நிர்க்கதியாய் நிற்கும் மக்களை நெகிழ வைத்த இந்தியக் கடலோரக் காவல்படையினர்!

கஜா புயல் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மண்டபம் கடலோரக் காவல் படையினர் தங்கள் சொந்த நிதியிலிருந்து நிவாரண உதவிகளை வழங்கினர்.

கஜா புயல் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இந்திய கடலோரக் காவல்படை உதவி
 

கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வீசிய கஜா புயலினால் டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் உருக்குலைந்து போயின. இந்தப் புயலினால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான வீடுகளும் அடியோடு அழிந்து போயின. இதையொட்டி மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. இதில் மண்டபத்தில் உள்ள இந்தியக் கடலோரக் காவல் படையினரும் இணைந்து நிவாரண உதவிகள் வழங்கியது பாதிக்கப்பட்ட மக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

இந்திய கடலோரக் காவல்படையினர் நிவாரண உதவி

பொதுவாக கடலோரக் காவல் படை வீரர்கள் புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், மீட்புப் பணிகளிலும் ஈடுபடுவது வழக்கம். இதன்படி கடந்த 16-ம் தேதி நள்ளிரவு வீசிய கஜா புயலுக்கு முன்னதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே புயல் குறித்து விழிப்பு உணர்வு பணிகளை மேற்கொண்டதுடன், மீட்புப் பணிகளுக்கும் தயார் நிலையில் இருந்தனர். மேலும் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட படகுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே துறையினருடன் இணைந்து பாம்பன் பாலம் வழியாகப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல வைத்தனர்.

இதன் பின் கஜா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக நின்ற புதுக்கோட்டை மாவட்டம் கணேசபுரம், மல்லிப்பட்டினம், சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட 9 கிராமங்களுக்குச் சென்ற இந்தியக் கடலோரக் காவல்படையினர் தங்கள் சொந்த நிதியிலிருந்து 555 கிலோ அரிசி, 100 கிலோ சர்க்கரை, 50 கிலோ பருப்பு, 2,500 பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் தண்ணீர், பாய், மெழுகுவத்தி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர். நாட்டின் பாதுகாப்புப் பிரிவுகளில் ஒன்றான கடலோரக் காவல்படையினர் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கிய நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.