`நாங்க திரும்பி வருவோம்; எதற்கும் கலங்காதீங்க!' - தவிக்கும் மக்களை நெகிழவைத்த விஜய் சேதுபதி ரசிகர்கள் | actor vijay sethupathi fans in cyclone affected areas

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (01/12/2018)

கடைசி தொடர்பு:15:45 (01/12/2018)

`நாங்க திரும்பி வருவோம்; எதற்கும் கலங்காதீங்க!' - தவிக்கும் மக்களை நெகிழவைத்த விஜய் சேதுபதி ரசிகர்கள்

`கஜா' புயலால் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து தவித்துப்போன நடிகர் விஜய் சேதுபதி, தான் வெளி நாட்டில் இருந்தபோதும் தன் ரசிகர்கள் மூலம் உடனே 25 லட்சம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து சத்தமே இல்லாமல் உதவி செய்திருக்கிறார். அவரை நிஜமான தர்மதுரை என மக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டினர்.

தவிக்கும் மக்களை நெகிழவைத்த விஜய்சேதுபதி ரசிகர்கள்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கலைத்துப்போடப்பட்டன. மக்கள் வீடுகள், வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். ஒரே இரவில் வாழ்க்கைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் இழந்து கண்ணீர் வடித்ததோடு சோறு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இந்தத் துயரமான நேரத்தில் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தது உறுதுணையாக இருந்ததோடு கஜாவால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு பெரும் ஆறுதலாகவும் அமைந்தது. புயல் அடித்த மூன்றாவது நாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உடனடித் தேவையான பொருள்களோடு இளைஞர்கள் பலர் வந்திறங்கினர். புயலுக்கு எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு பரிதவிப்போடு நின்ற மக்களிடம் அன்போடு அணுகி கொண்டு வந்த நிவாரணப் பொருள்களைக் கொடுத்தனர்.

`நாங்க திரும்பி வருவோம். நீங்க எதற்கும் கலங்காதீங்க' என்றும் கூறிவிட்டு கிளம்பிய அந்த இளைஞர்களிடம், `சாலையே இல்லாத எங்க ஊருக்கு வந்து  எங்களுக்கு உதவி செஞ்சுருக்கீங்க. இத உசுரு உள்ளவரைக்கும் மறக்க மட்டோம்' என மக்கள் நெகிழ்ச்சியோடு நன்றி சொல்ல அந்த இளைஞர்கள் கிளம்பிச் சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவியவர்கள் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இதை ஒரு சில இடங்களில் கண்டுபிடித்த மக்கள், `உண்மையிலேயே அவர் தர்மதுரைதான்' என நெகிழ்ந்து பாராட்டினர்.

இது குறித்து விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ரமணா என்பவரிடம் பேசினோம். ``புயல் அடித்த சமயத்தில் அண்ணன் வெளிநாட்டுக்கு சூட்டிங்குக்காகச் சென்றிருந்தார். புயல் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தியதை அறிந்து போன் மூலம் தொடர்புகொண்டவர் ஏழைகளின் கூரை வீடுகளைப் புயல் தூக்கி வீசிவிட்டதாமே. பல இடங்களில் மக்கள் உணவு, தண்ணி கிடைக்காமல் இருளில் தவிக்கிறார்களாமே. இதை எப்படி அவர்களால் தாங்கிக்கொள்ள முடிகிறதோ எனக் கவலைப்பட்டதோடு கொஞ்சம் நேரம் எதுவுமே பேசவில்லை.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் விஜய்சேதுபதி ரசிகர்கள்

ஊருக்கே சோறு போட்டவர்கள் டெல்டா மாவட்ட மக்கள். அவர்கள் உணவு கிடைக்காமல் பட்டினியாக  இருக்கக் கூடாது அவர்களுக்கு தேவையான பொருள்களை அனுப்பி வைக்கிறேன். அதை உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களிடம் கொடுத்துவிடுங்கள் எனச் சொன்னார். சொன்னது போலவே சென்னையில் இருந்து அடுத்த நாளே 25 லட்சம் மதிப்புள்ள பொருள்களை அனுப்பி வைத்தார். ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நாங்கள் அவற்றை மக்களிடம் கொடுத்தோம். இதை நான்தான் செய்கிறேன் என எங்கும் சொல்லக் கூடாது என்றும் கூறிவிட்டார். அதனால் நாங்கள் இதை வெளியே சொல்லவில்லை. ஆனாலும், மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பிய விஜய் சேதுபதி மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டார்களா என அக்கறையுடன் விசாரித்தவர், நாம கொடுத்தது பத்தாது. மேலும் அவர்களுக்கு எதாவது செய்ய வேண்டும் எனக் கூறியதோடு எங்களையும் பாராட்டினார்'' என்றார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க